பனை வெட்டி பணம் பார்க்கும் ஊ.ம., தலைவர்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பனை வெட்டி பணம் பார்க்கும் ஊ.ம., தலைவர்கள்!

Added : ஜன 18, 2022 | |
பனை வெட்டி பணம் பார்க்கும் ஊ.ம., தலைவர்கள்!''சின்ன மீனுக்கு துாண்டில் போட்டு, பெரிய மீனை பிடிக்குறாராம் பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''யாரு, என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மின்னலே இயக்குனரின் பெயருடைய, பொள்ளாச்சி எஸ்.ஐ., ஒருத்தர், போக்குவரத்து விதிமீறல் போன்ற பிரச்னைகளில் சிக்கியோரிடம், 'சட்டம் தன் கடமையை செய்யும்'

 டீ கடை பெஞ்ச்


பனை வெட்டி பணம் பார்க்கும் ஊ.ம., தலைவர்கள்!


''சின்ன மீனுக்கு துாண்டில் போட்டு, பெரிய மீனை பிடிக்குறாராம் பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''யாரு, என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மின்னலே இயக்குனரின் பெயருடைய, பொள்ளாச்சி எஸ்.ஐ., ஒருத்தர், போக்குவரத்து விதிமீறல் போன்ற பிரச்னைகளில் சிக்கியோரிடம், 'சட்டம் தன் கடமையை செய்யும்' என, கெத்து காட்டுவாரு பா...

''யார் சிபாரிசு செய்தாலும், வழக்கு போட்டு நியாயத்தை நிலைநாட்டுவாராம்... இப்படி தன்னை 'ஹானஸ்ட் ஆபீசர்' போல காட்டிக்கிறதுக்கு பின்னாடி, ஒரு திட்டம் இருக்காம் பா...

''இப்படி இருந்தால் தான், பெரிய பிரச்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றப்போ பெரிய அளவுல, லஞ்சம் கிடைக்குமாம் பா...

''பொள்ளாச்சி - திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணி நில எடுப்புக்கு, உயர் நீதிமன்றத்துல நில உரிமையாளர்கள் தடை உத்தரவு வாங்கியிருக்காங்க பா...

''அந்த நிலத்துல, ஒப்பந்ததாரர் அத்துமீறி நுழைஞ்சு, சொத்துக்கு சேதம் விளைவிச்ச விஷயத்துல, அந்த எஸ்.ஐ., தலையிட்டார்... ஒப்பந்ததாரர் தரப்புல, 'பெரிய அமவுன்ட்' வாங்கினவர், நில உரிமையாளர்களை மிரட்டி, வழக்கு பதியாமல் அனுப்பி வச்சாராம் பா...

''லஞ்சம் வாங்குறதுக்கு பட்டம் வாங்கி இருப்பார் போல பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.

''இப்படியும் அரசியல் செய்யலாமுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா, சமூக வலைதளத்துல, 'முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டலில், உதயநிதியின் வழியில் அப்துல்லா' எனக் குறிப்பிட்டு
பொங்கல் வாழ்த்து படம் பதிவிட்டாருங்க...

''அதுல, பூதக்கண்ணாடி வச்சி பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி படங்கள் இருந்துச்சு... முதல்வர் ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி படம் பெரிசாக போட்டுருந்தாங்க...

''அவர் தரப்புல சில பேரு, நிருபர்கள்கிட்ட போய், 'அப்துல்லா இப்படி வாழ்த்து போடலாமா?'ன்னு செய்தி போட சொல்லுறாங்களாம்... அதாவது, எப்படியாவது தி.மு.க., தலைமையின் கவனத்துக்கு அந்த செய்தி போகணுமாமுங்க...

''நல்ல பேரு வாங்கி அரசியலில் உயருறது ரொம்ப கஷ்டம்... எடக்கு மடக்காக ஏதாவது செஞ்சி, தலைமையின் கவனத்தை கவர்ந்து பதவி உயர்வு வாங்குறது 'ஈசி'ங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.

''நுாற்றுக்கணக்கான பனை மரங்களை வெட்டி, பணம் பார்த்துருக்காவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''அடக்கொடுமையே... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம்,சிப்காட், முகுந்தராயபுரம் பகுதிகள்ல சாலையோரம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்துச்சு வே...

''அந்த மரங்களை ராத்திரியோட ராத்திரியா சமூக விரோதிகள் சிலர் வெட்டியிருக்காவ... இதுக்கு, அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் உடந்தையாம் வே...

''வெட்டுன மரங்களை செங்கல் சூளைக்கு வித்து, கணிசமான பணம் பார்த்துருக்காவ... அதுல ஒரு பங்கு அதிகாரிகளுக்கும் போயிருக்காம் வே...

''நிறைய செலவு செஞ்சு பதவிக்கு வந்தோம்... 'டெண்டர்'வேலை எதுவும் வரலை... அதனால தான், பனை மரத்தை வெட்டி, தேர்தலுக்காக வாங்குன கடனை கட்டுறோமுன்னு, ஊராட்சி மன்ற தலைவர்கள்
சொல்லுறாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X