பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், மழை பெய்து நீராதாரங்கள் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், அதிக அளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. கூடுதல் வருமானத்துக்காக பல விவசாயிகள் தென்னை இடையே ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் ஆண்டுதோறும், 1,200 ஏக்கர் பரப்பில், வாழை சாகுபடி செய்கின்றனர்.
பெரும்பாலும் மழைக்காலத்திலும், அதிக நீர் இருக்கும் போது மட்டுமே வாழை சாகுபடி செய்வது வழக்கம். ஜன., இறுதி முதல் மே வரையிலான கோடையில், போதிய அளவு தண்ணீர் கிடைக்காது என்பதால் விவசாயிகள் பலரும், வாழை சாகுபடியை தவிர்க்கின்றனர்.இந்நிலையில், கடந்தாண்டு அதிக மழைப்பொழிவால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் நிரம்பி வழிகின்றன.கோடை துவங்கியுள்ள நிலையிலும், விவசாயிகள் கிணறு, ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி, வாழை சாகுபடியை துவங்கி உள்ளனர். சிலர் நீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர்.
இந்தாண்டு வாழைப்பழம் மற்றும் இலைக்கு அதிக தேவை இருப்பதால், வாழை சாகுபடி செய்ய முன்வர வேண்டுமென, தோட்டக்கலைத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டுவதால், ஓட்டல்களில் பலரும் வாழை இலை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் இருப்பதால், அதிக அளவில் சுப நிகழ்ச்சிகள் மண்டபங்களில் நடக்கிறது.விவசாயிகள் லாபம் பெற, இலை வாழை சாகுபடி செய்யலாம். வாழைப்பழத்துக்கும் அதிக கிராக்கி உள்ளதால், நேந்திரன், கதளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்யலாம்.சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில், சொட்டு நீர் பாசன திட்டம் அமைத்துத்தரப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE