உடுமலை:கிராமங்களில், பூட்டிக்கிடக்கும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களை, நுாலக ஆணைக்குழுவில் சேர்த்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 2006-07ம் ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.திட்டத்தின் கீழ், நுாலகக்கட்டடத்திற்கு, 4 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரம் புத்தகங்கள் மற்றும் அலமாரி உட்பட பொருட்கள் வழங்கப்பட்டன.நுாலகர்களாக சம்பந்தப்பட்ட கிராமங்களில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், மாதத்திற்கு 750-1,500 ரூபாய் ஊக்கத்தொகை அடிப்படையில், நியமிக்கப்பட்டனர்.உடுமலை ஒன்றியத்தில், 38; குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவங்கப்பட்டது. நுாலக வசதியில்லாத சிறிய கிராமங்களில், இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது; நாளிதழ்களும் வாங்கியதால், போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராப்புற, இளைஞர்கள் பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில், முறையாக சம்பளம் வழங்காதது, புதிய புத்தகம் ஒதுக்கீடு செய்யப்படாதது உட்பட பிரச்னைகளால், இரு ஒன்றியங்களிலும், முதற்கட்டமாக, 30க்கும் மேற்பட்ட நுாலகங்கள் மூடப்பட்டன.தற்போது, பெரும்பாலான நுாலகங்கள் பூட்டப்பட்டு, அக்கட்டடங்கள், திறந்த வெளி 'பார்' ஆக மாற்றப்பட்டுள்ளன.சில கட்டடங்களை, ஊராட்சிகளின் தேவைக்காக சிமென்ட் குடோனாகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல நுாலக கட்டடங்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதமடைந்துள்ளது.இவ்வாறு, இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி வீணாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அண்ணா மறுமலர்ச்சித்திட்ட நுாலகங்களை, பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணைக்குழுவுடன் இணைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.பொது நுாலகத்துறையுடன் இணைப்பதால், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களுக்கு, அதிக புத்தகங்களை ஒதுக்கீடாக பெற முடியும்.பராமரிப்பு நிதி, நிரந்தர நுாலகர், கழிப்பிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால், பல கிராமங்களுக்கு, நுாலக வசதி கிடைக்கும்.கிராமங்களில் வீணாகி வரும், நுாலக கட்டடங்களை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கல்வி ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE