பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, இளைஞர்கள், சிறுவர்கள் விழிப்புணர்வின்றி, பி.ஏ.பி., கால்வாயில் குதித்து சாகசம் செய்து குளியல் போடுவது, காண்போரை பதைபதைக்கச் செய்கிறது.பொங்கல் பண்டிகை, கொரோனா பரவலையொட்டி, அரசு கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. வீட்டில் முடங்கிய சிறுவர்கள், இளைஞர்கள், பொழுதுபோக்க ஊரைச்சுற்றுகின்றனர்.அவர்களில் சிலர், புளியம்பட்டி அருகே பல்லடம் நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பி.ஏ.பி., திட்ட தேவம்பாடி பகிர்மான கால்வாயில் குதித்து, சாகசம் செய்து குளித்து மகிழ்ந்தனர்.சிறுவர்கள் பலரும், கரையில் இருந்து குட்டிக்கரணம் போட்டு கால்வாய் நீரில் பாய்வதும், அதை சக சிறுவர்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்துவதும் என ஆபத்து அறியாமல் விளையாண்டனர்.இது, காண்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கியது. நீரின் வேகத்தில் அடித்துச் செல்லவும், புதர்செடிகளில் அகப்படவும், குதிக்கும் போது கற்கள், கான்கிரீட்டில் அடிபட்டு மயக்கமடையவும் நிறைய வாய்ப்புள்ளது. இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுமதிக்ககூடாது.இதேபோன்று, கிராமங்களில் உள்ள பொதுக்கிணறுகள், தோட்டத்து கிணறுகளில், சிறுவர்கள் சாகச குளியலில் ஈடுபடுகின்றனர். நீச்சல் பழக வேண்டும் என்பதற்காக, பெற்றோர் அனுமதிக்கின்றனர். ஆனால், சிறுவர்களுக்குள் ஏற்படும் போட்டி, பயமறியாத மனநிலையால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உள்ளது.விடுமுறை நாட்களில், குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். தவறினால், அசம்பாவிதங்கள் நடந்து, அழுது புலம்ப வேண்டிய நிலைமை ஏற்படலாம், என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். இதை, போலீசாரும் கண்காணித்து, சிறுவர்கள், பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE