சென்னை : மதுரை, தேனி, விருது நகர், துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வீடுகளுக்கு 'பைப் லைன் காஸ்' வினியோகம் செய்வதற்கான அனுமதி, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் எல்.பி.ஜி., எரிவாயுக்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதிக்காத, இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.இது, தரைக்கு அடியில் பல கி.மீ., ஆழத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.
கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், 'சிட்டி காஸ் டிஸ்ட்ரிபியூஷன்' எனப்படும், வினியோக நிறுவனங்கள் வாயிலாக, வீடுகளுக்கும், மோட்டார் வாகனங்களுக்கும் குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
11 புவியியல் பகுதிகள்
திருவள்ளூர் மாவட்டம், எண்ணுாரில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்.என்.ஜி., எனப்படும், திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது.அந்த முனையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவநிலை எரிவாயு வருகிறது. அங்கிருந்து, துாத்துக்குடி வரை எரிவாயு எடுத்து செல்ல, இந்தியன் ஆயில் நிறுவனம் குழாய் வழித்தடம் அமைத்துள்ளது.தமிழகத்தில் முதல் கட்டமாக, 11 புவியியல் பகுதிகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு அனுப்பி, சி.ஜி.டி., ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, வினியோகம் செய்யப்பட உள்ளன. ஒரு புவியியல் பகுதி என்பது இரண்டு, மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது.
ஒழுங்குமுறை வாரியம்
அதன்படி, சென்னை, திருவள்ளூர், நாகை, சேலம், கோவை, திருப்பூர், கடலுார், மயிலாடுதுறை, ராமநாதபுரம், வேலுார், காஞ்சிபுரம் ஆகிய 11 பகுதிகளில் குழாய் வழித்தடத்தில்
எரிவாயு வினியோகம் செய்வதற்கான பணி நடந்து வருகிறது.அதில், சென்னை, திருவள்ளூரில் வினியோக பணியை, 'டோரன்ட் காஸ்' நிறுவனமும்; சேலம், கோவையில் இந்தியன் ஆயில் நிறுவனமும் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு புவியியல்பகுதியிலும், காஸ் வினியோகம் செய்வதற்கான அனுமதியை, ஏல அடிப்படையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வழங்கி வருகிறது.
தற்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது புவியியல் பகுதிகளில் காஸ் வினியோகம் செய்வதற்கான அனுமதி, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம், மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகள், மோட்டார் வாகனங்களுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்
படுத்தி, அதன் வாயிலாக எரிவாயு வினியோகம் செய்ய உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE