சென்னை:''மாநில திட்டக்குழு, 'ஏ டூ இசட்' அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அனாவசிய செலவுகளை குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மாநில திட்டக்குழு ஆய்வு கூட்டம், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்கு தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து, வல்லுனர் குழுவுடன் நீங்கள் ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன்பின் அவற்றை மேம்படுத்த, அரசுக்கு திட்ட அறிக்கையாக வழங்கலாம்.
ஒரு ஆலோசனையை சொல்லும் போது, 'ஏ டூ இசட்' என அனைத்தையும், நீங்களே அலசி ஆராய்ந்து, எங்களுக்கு வழங்க வேண்டும்.மனிதவள மேம்பாடு, வாழ்க்கை தரம், மனித ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நல்வாழ்வு, மனித உரிமைகள், சமூக நீதி, விளிம்பு நிலை மக்கள் என அனைத்து தரப்புகளிலும், நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.
இத்தகைய குறியீடுகளை, தமிழகத்தில் மேம்படுத்த, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்போடு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தர வேண்டும்.சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை. தொழில் வளர்ச்சியில், கல்வியில், வறுமையில், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு உள்ளது. இதைக் களைய, தமிழகம் முழுமைக்கான சமச்சீரான ஒரு வேலைத்திட்டம் தேவை. இதற்கான பயணத்தை நாம் உடனடியாக துவக்கியாக வேண்டும்.
அரசு திட்டங்கள் உரிய பலனை கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு வழியே, நீங்கள் கண்காணித்து சொல்ல வேண்டும். திட்டங்களை உருவாக்குதல், நடைமுறைக்கு வருதலுக்கு இடையிலான கால இடைவெளியை குறைக்க வேண்டும்.தமிழகத்தின் நிதி நெருக்கடியை, நான் சொல்லத் தேவையில்லை. அனாவசிய செலவுகளை குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை.
நிதி திரட்டுதல் என்பது வரி வசூல், பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை ஆகியவற்றின் வழியே மட்டும் வருகிறது.அதைத்தாண்டி சுற்றுலா, சிறுகுறு தொழில்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி போன்ற துறைகளின் வழியாகவும், வருமானம் ஈட்டும் வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தொழில் உருவாக்கம் என்பது, நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது, பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. அதற்கு உங்கள் வழிகாட்டுதல்கள் தேவை.இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில், திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் விக்ரம்கபூர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE