வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : 'பி.எம்., கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் இணையதளத்தில் பிரதமரின் பெயர், படம், தேசியக் கொடி ஆகியவற்றை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை' என, மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது: கொரோனா தொற்று பரவலின்போது சுகாதார அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல திட்டங்களுக்காகவும் பி.எம்., கேர்ஸ் நிதி என்ற அறக்கட்டளையை பிரதமர் துவக்கினார். மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தவித தொடர்புமில்லை என மத்திய அரசே தெரிவித்துள்ளது.
அப்படியிருக்கையில் அந்த அறக்கட்டளையின் இணையதளத்தில் பிரதமர் பெயர், அவரது படம், தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இது அரசியல் சட்டத்தை மீறிய செயல். அதனால் இணையதளத்தில் இருந்து பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம் ஆகியவற்றை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமரின் இயற்கை பேரிடர் நிதிக்கான இணையதளத்தில் பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. பிரதமரின் இயற்கை பேரிடர் நிதி போன்றது தான், பி.எம்., கேர்ஸ் நிதியும். இரண்டையும் பிரதமர் தான் நிர்வகிக்கிறார். அதனால் பி.எம்., கேர்ஸ் நிதிக்கான இணையதளத்தில் பிரதமரின் பெயர், புகைப்படம், தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE