வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய் : அபுதாபியில் 'ஆயில் டேங்கர்' மற்றும் விமான நிலையம் மீது 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடன ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரமான அபு தாபியில் பெட்ரோல் சேகரித்து வைக்கப்படும் 'ஆயில் டேங்கர்' கள் மீது ஆளில்லா குட்டி விமானங்களை ஏவி நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல்நடத்தப்பட்டது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் இதே முறையில் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் இருவரும் பாக். ஐச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஆறு பேரில் இந்தியர்கள் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய துாதர் சஞ்சய் சுதிர் கூறும்போது '' உயிரிழந்த இந்தியர்கள் இருவர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவர்களது குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் '' என்றார். எனினும் அவர் இறந்த இருவரின் பெயர்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ''அபுதாபி தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் '' என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையது தெரிவித்துள்ளார்.
படங்கள் வெளியீடு
'அட்நாக்' என சுருக்கமாக அழைக்கப்படும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் 'டேங்கர்'கள் மீதுதான் ஆளில்லா குட்டி விமானத்தை ஏவி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது தீ மற்றும் கரும்புகை பரவிய காட்சியை படம் பிடித்து 'அசோசியேட்டட் பிரஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. மற்றொரு படத்தில் தீயை அணைக்க பயன்படுத்திய வெள்ளை ரசாயன நுரை தரையெங்கும் பரவியிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE