வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் உள்ள குடிசை வீடுகள் குறித்த விபரங்களை பெற புதிதாக கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் 2010ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அப்போது 22.04 லட்சம் குடிசை வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதில் 3.05 லட்சம் பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.அதன்பின் 2016 - 17 முதல் பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இன்னும் எவ்வளவு குடிசை வீடுகள் உள்ளன என்பதை கண்டறிய வேண்டும். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை வீடுகள் எண்ணிக்கை குறித்து மறு கணக்கெடுப்பு நடத்த தேவையான படிவங்களை நாளைக்குள் தயார் செய்ய வேண்டும்.
அதேபோல கணக்கெடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் குழுக்களையும் உருவாக்க வேண்டும். நாளை மறுதினம் பயிற்சியாளர்களுக்கும்; ஜன.22ம் தேதி கணக்கெடுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணியை ஜன. 24ம் தேதி துவக்கி பிப். 3க்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பு படிவத்தில் குடும்ப தலைவர் பெயர் மதம் ஜாதி வாக்காளர் அடையாள அட்டை எண் ரேஷன் கார்டு எண் குடும்ப ஆண்டு வருமானம் சொந்த வீடா வாடகை வீடா என்பது போன்ற விபரங்கள் கேட்கப்பட உள்ளன.
மேலும் இதற்கு முன் வீடு வழங்கும் திட்டத்தில் பயன் அடைந்தவரா வீட்டு முகவரி வீட்டு வரி விதிப்பு மின் இணைப்பு விபரம் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை குறித்த விபரம் பட்டா மனையின் வகை குறித்த விபரங்களும் இடம் பெறும். அவற்றை கணக்கெடுப்பாளர் குடிசை வீட்டில் வசிப்போரிடம் கேட்டு பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE