வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக கோவிலுக்குள் பல்வேறு பணிகள் நடந்துள்ளன.அவற்றில், தேவர் மண்டபத்து துாண்களில் முருகப்பெருமானின் பல்வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும், முருகனின் முகங்களும் கற்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கந்தன், ஆறுமுகம், சக்தி பாலன், சண்முகம், சரவணன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், தண்டபாணி என, நாம் வணங்கும் முருகப் பெருமானைப் பற்றி நமக்கு தெரிந்தது, சில பெயர்கள்தான். ஆனால், அவருக்கு 125ற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.

அவரது வரலாற்றைச் சொல்லும் கந்த புராணத்தை படித்தால், அந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம்.கங்கை நதிக்கு ஒப்பான சரவணப் பொய்கையில் வளர்ந்தவராதலால், காங்கேய மூர்த்தி என்றும், சூரபத்மன் வம்சத்தில் வந்த தாரகாரன் என்ற அரக்கனை வதம் செய்தவர் என்பதால், தாரகாரமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

சூரபத்மனை வதம் செய்ய தேவர்கள் ஒன்றிணைந்து, முருகனை தலைவராக தேர்ந்து எடுத்த போது, 'இந்திரனே தலைவராக இருக்கட்டும்; நான் அவருக்கு சேனாதிபதியாக இருந்து வெற்றியை ஈட்டித்தருகிறேன்' என்றதனால், சேனான்யன் என்றும், சூரபத்மனின் வதத்தின் போது வீரபாகு உள்ளீட்ட சேனைத் தலைவர்களுக்கு தலைவனாக இருந்தவர் என்பதால், தேவசேனாதிபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

மயிலோடு நெருக்கமாக இருப்பவர் என்பதால், மயிலின் மற்றொரு பெயரான சிகியின் பெயரைக் கொண்டு, சிகிவாகணானாகவும், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியை தாங்கியவர் என்பதால், அக்னி ஜாதாயன் என்றும் போற்றப்படுகிறார். சூரியனின் வெப்பத்திற்கும் மேலான சக்தி கொண்டு அசுரர்களை அழித்தவர் என்பதால், சவுரபேயன் என்றும் அவருக்கு பல பெயர்கள் உள்ளன. இவ்வாறு முருகப்பெருமானின் பெயரையும், உருவத்தையும் விளக்கத்தையும், மண்டபத்தில் உள்ள துாண்களில் பொறித்துள்ளனர்.

மேலும் அகத்தியர், சாய்பாபா, பட்டினத்தார், ரமணர் போன்ற மகான்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகம் முடிந்த பின் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மூலவரைப் பார்த்துவிட்டு, பின்னர் மூலவருக்கு முன்பாக உள்ள தேவர் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிற்பங்களின் அழகில் தங்கள் மனதை பறிகொடுக்கப் போவது நிச்சயம். ஆகவே, இவை கற்சிற்பங்களாக அல்லாமல், தன்னைக் காணவரும் பக்தர்களிடம் பேசும் பொற்சிற்பங்களாகவும் திகழப்போகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE