வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நடிகர் தனுஷ் மனைவியும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணி குறித்து பலவாறாக பேசப்பட்டு வருகிறது.
திரைப்பட இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 2002ல் 'துள்ளுவதோ இளமை' படம் வாயிலாக 22 வயதில் நாயகனாக அறிமுகமானார். 2004ல் தன்னை விட இரண்டு வயது மூத்தவரான ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் தனுஷ் மணந்தார். தொடர்ந்து ரஜினி பட டைட்டில்களை பயன்படுத்தினார். 'பொல்லாதவன்', 'படிக்காதவன், தங்க மகன், கொடி' என பல படங்களின் பெயரை தன் படத்திற்கு சூட்டினார். மாமனார் பாணியில் ஹாலிவுட் படத்திலும் நடித்தார்.
போயஸ் கார்டனில் கடந்தாண்டு பிப்ரவரியில் புது வீடு கட்ட பூமி பூஜையும் போட்டார். இதில் ரஜினியும் குடும்பத்துடன் பங்கேற்றார். ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் நடித்த தனுஷ், 'கொலவெறி...' பாடலால் உலகம் முழுதும் பிரபலமானார். அப்படத்தில் ஸ்ருதிஹாசன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் மனைவியை விவாகரத்து செய்வதாக தனுஷ் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன
விவாகரத்து குறித்து தமிழ் திரையுலக வட்டாரங்கள் கூறியதாவது: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்த போது, திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தனுஷ், ரஜினி வீட்டு மூத்த மருமகன் அந்தஸ்த்தை மேலும் மெருகேற்றினார். அதேநேரத்தில் பாடல் எழுதுவதாக கூறி தனியே வசிக்க தொடங்கிய தனுஷ் பார்ட்டியில் நடிகையருடன் பங்கேற்ற போட்டோ மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வதந்திகளை பரப்பின. ஆனாலும் பொது நிகழ்ச்சியில் தம்பதி சமேதமாய் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை தனுஷும், ஐஸ்வர்யாவும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடந்தாண்டு தனுஷ் தேசிய விருதை பெற்றபோதும் 'பெருமைமிகு மனைவி' என ஐஸ்வர்யா சமூக வலைதளத்தில் வாழ்த்தி இருந்தார். சமீபகாலமாக விவாகரத்தான திரையுலகை சேர்ந்தவர்களுடன் தனுஷ் காட்டிய நெருக்கமே அவரது வாழ்க்கையில் இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. ரஜினியின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்த்தை கழற்றி வைக்கும் அளவுக்கு 'தனுஷ் யாருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?' என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இளைஞர்களுக்கு எச்சரிக்கை'
* விவாகரத்து குறித்து நடிகை கஸ்துாரி, ''விவாகரத்து முடிவு பெற்றோருக்கு எவ்வளவு சரியானதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அது எப்போதும் தவறாகும். குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கே முதலிடம் தர வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.
* நடிகை ஆர்த்தி, ''18 ஆண்டுகள் அன்பான வாழ்க்கை வீணாகக் கூடாது. எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல. இந்த சின்ன பிரிவும், உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டுக் கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்,'' என்று கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE