வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்க உள்ள எட்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு ஏற்கனவே நிலம் வழங்கியவர்கள், மீண்டும் நிலம் தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் எட்டாம் கட்ட அகழாய்வு பணி நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற உள்ள அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே நிலம் வழங்கிய கதிரேசன், நீதியம்மாள், நிர்மலாதேவி, முத்துமாரி, சந்திரசேகரன் உள்ளிட்டோர் மீண்டும் நிலம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அகழாய்வு இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. அகழாய்வு நடந்த நீதியம்மாள், முத்துமாரி உள்ளிட்டோரின் நிலங்களை அதிகாரிகள் எவ்வித அறிவிப்புமின்றி அளவீடு செய்துள்ளனர்.
திருப்புவனம், சிவகங்கையில் நடந்த சமாதான கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அடுத்த கட்ட அகழாய்வுக்கு நிலம் தர மறுக்கின்றனர்.

குமுறும் உரிமையாளர்
இது குறித்து நில உரிமையாளர் கதிரேசன் கூறியதாவது,அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்வது, நில மதிப்பீடு குறித்து தகவல் தரவில்லை.
இந்த சூழலில் எப்படி 8 ம் கட்ட அகழாய்வுக்கு இடம் தரமுடியும். எனது நிலத்தில் இணைப்பு குழாய் பானைகள், உலைகலன், செங்கல் கட்டுமானம், சுருள்வடிவ குழாய், தமிழகத்திலேயே பெரிய 32 அடுக்கு உறைகிணறு, சரிந்த கூரை ஓடுகள் , தண்ணீர் செல்லும் கால்வாய் போன்ற செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியும் இருக்க வாய்ப்புள்ளது.

தொல்லியல் துறை சார்பில் நில உரிமையாளர்களுக்கு ஆழ்துளை கிணறு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சந்தை மதிப்பை விட மிகவும் குறைவான அரசு வழிகாட்டி மதிப்பை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே 8ம் கட்ட அகழாய்விற்கு நிலம் வழங்க வாய்ப்பில்லை, என்றார்.எனவே வேறு புதிய நிலங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை உயரதிகாரிகள் யாரும் இதுவரை கீழடிக்கு வரவில்லை. 8ம் கட்ட அகழாய்வு குறித்து தொல்லியல் துறையினர் எந்த வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை எனவே அடுத்த கட்ட அகழாய்வு துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE