
இந்து மதத்தில் யாகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. யாகம் என்பது ஒரு சிறப்பு மத செயல்முறையாகும், யாகம் நடத்துவதன் மூலம் யாகம் நடத்துபவர்கள் மன மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஆன்மீக செல்வத்தையும் பெற முடியும். இந்து வேதங்களில், சமஸ்கிருத காவியங்களில், யாகத்தின் முக்கியத்துவம் பல இடங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு விருப்பமும் யாகம் செய்வது என்ற நேர்மறையான வழியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. யாகம் வேதங்களில் சிறந்த கர்மாவாகும்.
இதனால்தான் இத்துணை சிறப்பு மிக்க யாகத்தை வீட்டிலோ,கோவிலிலோ அவரவர் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். வீட்டில் குழந்தைக்கு ஆயுள் யாகம் செய்வது முதல் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வு பெறவேண்டும் என்று கோவிலில் கூட்டாக செய்வது வரை இது போன்ற யாகங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கோவிலில் யாகம் நடத்துவது என்பது மிகச்சிறந்த செயலாகும்.இதற்காக வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு யாகசாலை மண்டபம் இருந்தது. பழமையான செங்கல் கட்டிடத்தில் இருந்த இந்த யாகசாலை மண்டபம் முழுமையாக அகற்றப்பட்டு தற்போது கருங்கல்லினால் கம்பீரமான முறையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. பொலிவான தோற்றத்தில் அமைந்துள்ள இந்த புதிய மண்டபத்தில் ஈஸ்வரனும்,ஈஸ்வரியும்,தட்சிணேஸ்வரர்,தட்சிணேஸ்வரியாக இருந்து யாகம் நடத்துபவர்களுக்கு அருளாசி புரியவிருக்கின்றனர்.
யாகம் நடத்துவது என்பது பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்ற கருத்தை மாற்றி எளியவர்களும் இங்கு யாகம் நடத்தலாம் என்பதற்கேற்ப கோவில் நிர்வாகம் பல திட்டங்களை வகுத்துள்ளது. பக்தர்கள் தாங்கள் நினைத்தது நடக்க, விரும்பிய பட்ஜெட்டில் இங்கு யாகம் நடத்தலாம் என்பது இங்குள்ள யாகசாலையின் சிறப்பாகும்.
எப்போதாவது யாகம் நடந்தது என்ற சொல் போய் இனி எப்போதும் இங்கு யாகம் நடக்கப் போகிறது, கோவிலுக்குள் மந்திர உச்சாடனைகள் கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறது என்பது உள்ளபடியே மனதிற்கு மனநிறைவு தரும் விஷயமாகும்.

இதே போல மூலவர் சன்னதிக்கு பிறகு பக்தர்கள் திரளாக நின்று தரிசனம் செய்வது உற்சவர் சன்னதியில்தான். கும்பாபிசேகத்திற்கு முன் உற்சவர் சன்னதி என்று எதுவும் இல்லை ஒரு பழைய மயில் வாகணத்தில் முருகன் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இப்போது உற்சவர் சன்னதிக்கென தனி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
முழுக்க முழுக்க கருங்கல்லால் தேர் வடிவில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கல் தேர் மண்டபத்தை இரண்டு யானைகள் சங்கிலி கட்டி இழுப்பது போல அமைந்திருப்பது இன்னும் சிறப்பாகும் இந்த கவின்மிகு கல்தேர் மண்டபத்தில் இருந்தபடி இனி உற்சவரான வடபழநியாண்டவர் அருளாசி வழங்கவிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE