பார்ல்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தவான், கோஹ்லி, ஷர்துல் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தனர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
பும்ரா நம்பிக்கை
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், மலான் ஜோடி துவக்கம் கொடுத்தது. மலான் 6 ரன் எடுத்த போது, பும்ரா 'வேகத்தில்' வெளியேறினார். குயின்டனை (27) அஷ்வின் போல்டாக்கி அசத்தினார். மார்க்ரம் 4 ரன் எடுத்த போது, வெங்கடேஷின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டாகி திரும்பினார்.

இரண்டு சதம்
பவுமா, வான்டெர் துசென் இணைந்தனர். துசென் 13 ரன்னில் அஷ்வின் பந்தில் கொடுத்த 'கேட்சை' நழுவவிட்டார் ரிஷாப். இந்திய வீரர்களின் பீல்டிங்கும் மந்தமாக அமைய இருவரும் வேகமாக ரன்கள் சேர்க்கத் துவங்கினர். பவுமா, துசென் இருவரும் ஒருநாள் அரங்கில் இரண்டாவது சதம் அடித்தனர். 4வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்த போது, ஒரு வழியாக பவுமா (110) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன் குவித்தது. துசென் (129), மில்லர் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.
தவான் அரைசதம்
கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கேப்டன் லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல் 12 ரன் எடுத்தார். தவான், கோஹ்லி இணைந்து ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். மஹராஜ் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ரன் 'வேகம்' காட்டினார் தவான். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில் தவான் அரைசதம் எட்டினார். 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் இவர் விளையாடிய 14 இன்னிங்சில், அடித்த 7வது அரைசதம் இது.
கோஹ்லி '51'
மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது, மஹராஜ் சுழலில் தவான் (79) அவுட்டானார். மறுபக்கம் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 63 வது அரைசதம் எட்டினார். இவர் 51 ரன் எடுத்து, ஷம்சி சுழலில் வெளியேறினார். இதன் பின் 'மிடில் ஆர்டரில்' வந்த ஸ்ரேயாஸ் (17), ரிஷாப் (16) என இளம் வீரர்கள் ஏமாற்ற, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
ஷர்துல் ஆறுதல்
அணியை மீட்பார் என நம்பப்பட்ட அறிமுக வீரர் வெங்கடேஷ் (2) ஏமாற்றினார். 138/1 என்றிருந்த இந்தியா, 188/6 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அஷ்வின் (7), புவனேஷ்வர் (4) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். கடைசியில் ஷர்துல் அரைசதம் அடித்த போதும், வெற்றிக்கு போதவில்லை. இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்து, 31 ரன்னில் தோல்வியடைந்தது. ஷர்துல் (50), பும்ரா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
3
'லிஸ்ட் ஏ' போட்டிகளில் எவ்வித அணிக்கும் கேப்டனாக விளையாடாமல், இந்திய அணிக்கு கேப்டன் ஆன மூன்றாவது வீரர் ஆனார் ராகுல். இதற்கு முன் சேவக், சையது கிர்மானி இதுபோல கேப்டன் வாய்ப்பு பெற்றனர்.
* குறைந்த ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற நிலையில் இந்திய அணிக்கு கேப்டன் ஆன முதல் வீரர் ஆனார் ராகுல். இவர் 39 ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்றார். மொகிந்தர் அமர்நாத், 50 போட்டிக்குப் பின் இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
242
இந்திய அணி 'ஆல் ரவுண்டர்' வெங்கடேஷ். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' போட்டியில் அறிமுகம் ஆன இவர், நேற்று ஒருநாள் அரங்கில் இந்தியாவின் 242 வது வீரராக அறிமுகம் ஆனார்.
925
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE