மூக்கை உடைத்து கொள்ளாதீர்!
கே.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உ.பி.,- - பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் அகராதியில், 'பிராமணர்' என்றால் ஜாதி கிடையாது; அது கற்றறிந்த சமூகம். மேலும் உ.பி.,யில், 80 சதவீத வாக்காளர்கள் தேசியவாதிகள், 20 சதவீத பேர் தேச விரோதிகள். இங்கு தற்செயலான விஷயம் என்னவென்றால், உ.பி., மக்கள் தொகையில், 19.26 சதவீத மக்கள் முஸ்லிம்கள்' என. காங்., 'மாஜி' அமைச்சர் ப.சிதம்பரம் அங்கலாய்த்து இருக்கிறார்.
உ.பி.,யில் உள்ள வாக்காளர்களில், 80 சதவீதம் பேர் தேசியவாதிகள்; 20 சதவீதம் பேர் தேசவிரோதிகள் என்று தான், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி இருக்கிறார்.இந்த, 80 : 20 விழுக்காட்டில் எந்த இடத்திலும் முஸ்லிம்களைப் பற்றி, யோகி ஆதித்யநாத் குறிப்பிடவேயில்லை.அவர் குறிப்பிட்ட, 80 சதவீத தேசியவாதிகளில் முஸ்லிம்களும் இருக்கக் கூடும்; 20 சதவீத தேசவிரோதிகளில் பிற சமூகத்தினரும் இருக்க கூடும்.
ப.சிதம்பரம் உச்ச நீதிமன்ற வக்கீலாயிற்றே... தொழில் புத்தி சும்மா இருக்குமா?'உ.பி.,யில் வாழும் முஸ்லிம்கள், 19 சதவீதத்தினரும் தேசவிரோதிகள்' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி இருப்பதாக வர்ணித்து, சாமர்த்தியமாக ஒரு அறிக்கை மூலம் கலாய்த்திருக்கிறார்.நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், காங்கிரஸ் பற்றியும், ப.சிதம்பரம் உட்பட அதை வழி நடத்தி செல்லும் அரசியல்வாதிகளை பற்றியும் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளனர்.
அதனால், இப்படி சொல்லாத விஷயத்தை சொன்னதாக கூறி, முஸ்லிம் மக்களின் மனதில் நஞ்சை விதைத்து, உ.பி., சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூடுதலாக ஒரு ஓட்டுக் கூட பெற்று விட முடியாது.முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்லிவிடவில்லை. 'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்' என்ற குறளில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொன்னதை தான் சொல்லி இருக்கிறார்.
அதாவது, 'அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும், அவர் அந்தணர் எனப்படுவார்' என அர்த்தம். இந்த உரை எழுதியது, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.எனவே ப.சிதம்பரம் அவர்களே... சிண்டு முடிய முயன்று மூக்கை உடைத்து கொள்ளாதீர்!
நீதித்துறையின் பொறுப்பு!
ச.பாலசுப்ரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பணம் கொடுத்து அரசு வேலை பெற முடியும் என்ற மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அப்படி குறுக்குவழியில் அரசு பணியில் சேர்ந்தோர், நேர்மையாக செயல்பட வாய்ப்பே இல்லை. மேலும் அவர்கள் அந்த குறுக்கு வழியில், பிறருக்கும் அரசு பணி வாங்கி கொடுப்பர்.
இவ்வழியில் தான், அரசு நிர்வாகத்தில் லஞ்சம் புரையோடுகிறது. இதை எவ்வாறு தடுத்த நிறுத்த முடியும்?'என்னிடம் பணம் பெற்ற பின், அரசு வேலை வாங்கித்தரவில்லை' என புகார் கொடுப்பவர் மீது தான், முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் என தெரிந்தே, குறுக்கு வழியில் அரசு பணியில் சேர முயன்றவர் மீது கருணை காட்டக் கூடாது.
அவருக்கு அளிக்கும் தண்டனை, பிறருக்கு பாடமாக அமைய வேண்டும்.'அரசு பணி வாங்கி தருகிறேன்' எனக் கூறி பணம் பெற்றவர், அதிகாரியாக இருந்தால், அவரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்; மக்கள்
பிரதிநிதி என்றால், அவரின் பதவியை பறிக்க வேண்டும்.தீவிர விசாரணை நடத்தி, அவரால் பணி நியமனம் பெற்ற அனைவரையும், பணி நீக்கம் செய்ய வேண்டும்.
அரசு வேலை வாய்ப்பில் வெளிப்படைத்தன்மை அவசியம். 'சிறப்பு நியமனம்' என ஏதேனும் வழிமுறை இருந்தால், அது குறித்து ஆராய வேண்டும்; வழிகாட்டு முறை தெளிவாக இருக்க வேண்டும்.
அனைத்து துறைகளிலும், விதிப்படி தான் பணி நியமனம் நடக்கிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.அரசு அலுவலக வளாகத்தில் நடமாடும் இடைத்தரகர்கள், தங்களை அரசு ஊழியராகவே, பொது மக்களிடம் அடையாளப்படுத்தி ஏமாற்றி
வருகின்றனர். அவர்களை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும்.அரசு பணி வாங்கித் தருவதாக கூறி பெற்ற பணத்தை, பிரச்னை ஏற்பட்ட உடன் திருப்பி கொடுத்து விட்டால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம், மோசடியாளர்களுக்கு
இருக்கிறது. இந்த எண்ணத்தை, அடியோடு நீக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.
ரயில் நிலையத்தில் மருந்தகம்!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்டணமில்லாத வருவாயை அதிகரிக்க, மக்களிடமிருந்து ஆலோசனை பெற மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் போட்டி
நடத்துகிறது. தேர்ந்தெடுக்கப்படும் முதல், 10 ஆலோசனைகளுக்கு பரிசுகள் உண்டு.உலகிலேயே அதிக தொழிலாளர்கள் பணிபுரியும், இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு, பொதுமக்களிடம் இருந்து தான் ஆலோசனை வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது.
கட்டணம் இல்லாத வருவாயாக, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விளம்பரம் செய்ய அனுமதித்து, வருவாய் ஈட்டப்படுகிறது.சரி, நமக்கு தெரிந்த வழிமுறைகளையும் சொல்வோம்...
பொதுப் பெட்டியில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரிடம் எப்போதாவது ஒருமுறை மட்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அபராதத் தொகை வசூலிக்கின்றனர்; இதை தினமும் மேற்கொண்டால் வருவாய் அதிகரிக்கும்.பயணியரின் நீண்ட கால கோரிக்கைகளான, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய ரயில் மற்றும் புதிய ரயில் சேவையை தொடரலாம்.
சில நாட்களுக்கு முன், தன் குழந்தைக்கு, 'டயப்பர் தேவை' என்று ரயில் பயணி ஒருவர், ரயில்வே அமைச்சருக்கு, 'டுவிட்டரில்' பதிவு அனுப்பி இருந்தார். அடுத்த நிலையத்தில், அப்பயணிக்கு டயப்பர் கிடைக்க, அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
எனவே ரயில் நிலைய நடைபாதையில், 'மருந்தகம்' உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம்.
ஆம்புலன்ஸ் வசதியுடன் தனியார் மருத்துவமனைக்கும் கூட, ரயில் நிலையத்தில் அனுமதி வழங்கலாம்.பல ரயில் நிலையங்கள், தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளன; கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையில், இவற்றை பராமரித்து, கட்டணம் வசூலிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE