'தமிழ்த்தாய் வாழ்த்து' எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பேரன் முனைவர் மோதிலால் நேரு: மனோன்மணியம் சுந்தரனார் மலையாளி என்றும், அவர் எழுதிய பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடலாமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய கேரளாவில் உள்ள ஆலப்புழையில் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்ததால், அவரை மலையாளி என்று சொல்கின்றனர். முன்னர் மலையாள நாடு என்று சொல்லப்படும் கேரளா, சேர நாடாகத் தானே இருந்தது. அப்படியானால் சேர மன்னர்கள் தமிழர்கள் இல்லையா?ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான முனைவர் பெர்னல், முனைவர் நெல்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் என்ற ஒரு நாகரிகம் இருந்தது என்ற உண்மையை மறைத்ததுடன், நம் இலக்கியங்களின் சிறப்பையும், இயற்றப்பட்ட காலத்தையும் குறைவாக மதிப்பிட்டு, தங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் உலக அளவில் ஆவணப்படுத்தி விட்டனர். இதை மறுத்துத் தன் ஆராய்ச்சி முடிவுகளை தக்க சான்றுகளுடன், அவர்களது மொழியான ஆங்கிலத்திலேயே எழுதி, தமிழின் தொன்மையையும், தமிழர்களின் நாகரிகத்தையும் உலகத்துக்கு பறை சாற்றியவர் சுந்தரனார் தான்.கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை என்பதால் தான், எல்லா மொழிகளையும் உள்ளடக்கி, கிரீடமாகத் தமிழ் இருப்பதை உணர்த்தவே, 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்று பாடினார் சுந்தரனார்.மற்ற மொழிக்காரர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. காரணம், அவர்களின் மொழிக்குக் கருப்பையாக தமிழ் தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்வதில் அவர்களுக்கு சங்கடமும், மனத் தடையும் இருக்கிறது. தமிழும், அதன் வழியாக உருவான பிற மொழிகளும் கிளைத்த நாடு என்பதால், இதைத் திராவிட நல்நாடு என்று சுந்தரனார் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, 1970 மார்ச் 11ல் நடந்த திரைப்படத் துறை சாதனையாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் தான், 'தமிழக அரசு நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இறைவணக்கம் பாடுவது போல், தமிழ்த்தாய் வாழ்த்தாக, 'நீராரும் கடலுடுத்த' பாடல் இருக்கும்' என்று அறிவித்தார். இந்த முடிவை கருணாநிதி எடுத்தபோது அவர் சந்தித்த சவால்கள் அதிகம். அவை எல்லாவற்றையும் தாண்டி, என் தாத்தாவின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அரங்கேறியது, எங்கள் குடும்பத்தினருக்குப் பெருமை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE