மேட்டுப்பாளையம் : காலரா, பிளேக் நோய்களில் இருந்து காப்பாற்றியதற்காக, வேண்டுதலை நிறைவேற்ற, இரண்டு நுாற்றாண்டுகளாக ஒரு கிராமத்தினர், பக்த பிரகலாத நாடகத்தை, தெருக்கூத்தாக நடத்தி வருகின்றனர்.
சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் கிராமம் உள்ளது; நெசவும், விவசாயமும் முக்கிய தொழில். 200 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் காலரா, பிளேக் நோய்களால் பலர் உயிரிழந்துள்ளனர். அப்போது இருந்த பெரியவர்கள், கொடிய நோயிலிருந்து கிராம மக்களை காப்பாற்ற, நாராயணனை வழிபட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி, பக்த பிரகலாதன் எனும் இரணியன் தெருக்கூத்து நடத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, தற்போது வரை, இக்கிராமத்தில் இரணியன் தெருக்கூத்து, தொடர்ந்து நடத்தப்படுகிறது.ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் அருகிவிட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடத்தப்படுகின்றன. அவற்றின் கலைவடிவமும் மாறிவிட்டது. ஆனால், இக்கிராமத்தில் மட்டும், முன்னோர்கள் நடத்திவந்த தெருக்கூத்தை, தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், இரணியன் தெருக்கூத்து தொடங்கியது. நாடக இயக்குனர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, தெருக்கூத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், 15-க்கும் மேற்பட்டவர்கள் நடித்தனர்; பலர் பின்பாட்டு பாடினர். தெருக்கூத்தின் முடிவில் நரசிம்மர், இரணியனை மடியில் வைத்து, வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணியும் காட்சியுடன், தெருக்கூத்து நிறைவடைந்தது.
அதன்பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.பகல், 2:00 மணிக்கு தொடங்கிய இந்த தெருக்கூத்து, இரவு, 11:00 மணிக்கு நிறைவடைந்தது. சுற்றுப்பகுதி கிராமத்தினர், தெருக்கூத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE