புதுடில்லி,:'கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை, நம் நாட்டில் வரும் 23ம் தேதி உச்சத்தை எட்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை தாண்டாது என, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஆறுதலை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலின்படி, முந்தைய 24 மணி நேரத்தில், புதிதாக2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 3.79 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'சூத்ரா' என்ற கணித முறையை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்து இந்தக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பேராசிரியர் மனீந்திர அகர்வால் தலைமையிலான இந்தக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நம் நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. இந்த அலை, நாடு முழுதும் வரும் 23ம் தேதி, புதிய உச்சத்தை எட்டும். தினசரி பாதிப்பு, நான்கு லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கும்.
டில்லி, மும்பை, கோல்கட்டாவில் ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ளது. கடந்த ஏழு நாட்களாக அங்கு அதிக அளவில் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஹரியானாவில், இந்த வாரத்தில் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டும். ஆந்திரா, அசாம், தமிழகத்தில் அடுத்த வாரம் உச்சத்தை எட்டும்.மக்கள் தொகையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, குறைந்த நோய் எதிர்ப்பு உள்ளவர்கள். மற்றொன்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள். 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே தாக்கும்.
அதனால் தான், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தற்போது பரவல் வேகம் குறைந்து வருகிறது.இந்த மூன்றாவது அலையில், உடல் நலப் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதனால், சாதாரண காய்ச்சல், உடல் வலிக்கு எடுத்துக் கொள்வதுபோல் மருந்தை எடுத்துக் கொள்கின்றனர். பலர் பரிசோதனை செய்வதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊக்கமளிக்கிறது!
நம் நாட்டில், 15 - 18 வயதுடைய சிறார்களில், 50 சதவீதம் பேருக்கு, முதல் 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த இளம் தலைமுறையினர் நமக்கு புதிய பாதையை காட்டுகின்றனர். இது ஊக்கமளிப்பதாக உள்ளது. அனைவரும் தடுப்பூசி போடுவதுடன், முககவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டும்.நரேந்திர மோடி, பிரதமர்
விளம்பரத்துக்கு உதவிய 'புஷ்பா'
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள, புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்பு துறை, இந்தப் படத்தின் ஒரு காட்சியை அடிப்படையாக வைத்து, புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில், 'புஷ்பா, புஷ்ப ராஜ்... நான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன்' என்ற வசனம் வரும்.அந்த காட்சியில் நடிக்கும் நடிகருக்கு, முககவசம் அணிவித்து, 'டெல்டா அல்லது ஒமைக்ரான் எதுவாக இருந்தாலும், நான் முக கவசத்தை எடுக்க மாட்டேன்' என கூறுவது போல் மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE