சென்னை :தமிழகத்தில் 600 மையங்களில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது.தமிழகம் உட்பட நாடு முழுதும் அதிவேகமாக பரவி வருகிறது.
அதனால், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை என்ற பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் ஜனவரியில் மட்டும், 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
எனவே, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போல, வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும், 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தோறும் நடைபெறும்.
இந்த முகாம் மட்டுமின்றி, சனிக்கிழமை தோறும் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களிலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும்.
அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடவே முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதால், தொற்றின் தீவிரத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE