சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயமானது குறித்த வழக்கின் புலன் விசாரணை மற்றும் துறை விசாரணை ஆகியவற்றின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் 'மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலர்களால் அர்ச்சிக்கும் வகையில் இருந்த மயில் சிலை திருடு போனது. அதற்கு பதிலாக வைக்கப்பட்ட மயில் சிலையின் அலகில் பாம்பு இருப்பதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது' என கூறப்பட்டுள்ளது.மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகி ''இன்னும் மயில் சிலை மீட்கப்படவில்லை; புலன் விசாரணை நடந்து வருகிறது. துறை சார்பிலும் உண்மை கண்டறியும் குழு விசாரிக்கிறது'' என்றார்.

இதையடுத்து 'சிலையை மீட்க முயற்சி செய்யுங்கள். அதுவரை ஏற்கனவே இருந்த சிலை போல மயிலின் அலகில் மலர்கள் இருக்கும் வகையில் வைக்க வேண்டும். விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது. கால தாமதத்தை ஏற்க முடியாது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின் மாயமான சிலை குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் துறை விசாரணை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 24ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE