காஞ்சிபுரம்-கொரோனா இரவு நேர ஊரடங்கால், பெருநகர் செய்யாற்றங்கரையில், 20 ஊர் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும், தைப்பூச ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால், நேற்று காலை, 20 ஊர் சுவாமிகளும் அந்தந்த கிராமத்திலேயே வீதியுலா வந்தன.உத்திரமேரூர் அடுத்த பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச திருவிழா, 10 நாட்கள் நடைபெறும். 10ம் நாளன்று, பெருநகர் செய்யாற்றங்கரையில், தைப்பூச ஆற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.இதில், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் செய்யாற்றை சுற்றியுள்ள உக்கல், ஆக்கூர், மானாம்பதி, விசூர் உட்பட 20 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் சங்கமித்து, பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளிப்பது வழக்கம்.இவ்விழாவில், செய்யாற்றங்ரையை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்தோர் மற்றும் அவர்களது உறவினர்கள் என, ஆயிரக்கணக்கானோர், குடும்பத்துடன் விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வர். பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமலும், இரவு முழுவதும் பொழுதை போக்கிவிட்டும், அதிகாலையில் வீடு திரும்புவது வழக்கம். 20 ஊர் சுவாமிகளும் செய்யாற்றில் இருந்து புறப்பட்டு, அந்தந்த கிராமத்தில் வீதியுலா செல்வர்.நடப்பாண்டு, தைப்பூச பெருவிழாவிற்கான கொடியேற்றம், கடந்த, 9ம் தேதி நடந்தது. 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு, 20 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் சங்கமிக்கும் தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. இந்நிலையில், கொரோனா இரவு நேர ஊரடங்கால், விழா நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.இதனால், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர், கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் உள்ளிட்ட, 20 ஊர் சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அந்தந்த கிராமங்களிலேயே நேற்று காலை சுவாமி ஊர்வலம் நடந்தது.வீதியுலாவின்போது, பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.தைப்பூச தினத்தன்று, பெருநகர் செய்யாற்றங்கரை விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், கொரோனா ஊரடங்கால் விழா நடத்த தடை விதிக்கப்பட்டதால், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE