மாமல்லபுரம்-மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு, பல ஆண்டுகளுக்கு பின், செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார்.மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் அமைந்து, தமிழக ஹிந்து சமய அறநிலைய துறை நிர்வகிக்கிறது. 108 வைணவ கோவில்களில், இது 63வது கோவிலாக விளங்குகிறது. இங்கு ஆளவந்தார் அறக்கட்டளையும் இயங்கி, இத்துறையே நிர்வகிக்கிறது. கோவிலின் முக்கிய உற்சவங்களை, ஆளவந்தார் உயிலின்படி, அறக்கட்டளை நிர்வாகமே நடத்துகிறது. நிர்வாக செயல்பாடு கருதி, அறக்கட்டளை நிர்வாகத்திடமிருந்து, கோவில் நிர்வாகத்தை தனியாக பிரித்து, செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். கடந்த 2013 செப்., வரை, செயல் அலுவலர் பணிபுரிந்தார். அதன்பின் அறக்கட்டளை செயல் அலுவலரே, கூடுதல் பொறுப்பில், கோவிலையும் கடந்த எட்டு ஆண்டுகளாக நிர்வகித்தார்.இதற்கிடையே, கோவிலின் வருவாய் குறைவு சூழல் கருதி, அறக்கட்டளை மற்றும் கோவிலை இணைத்து, ஒரே நிர்வாகமாக நிர்வகிக்க முடிவெடுத்து, கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முடிவெடுப்பது தாமதமானது.கோவிலுக்கு செயல் அலுவலர் இல்லாதது, இணைப்பு விவகாரம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இச்சூழலில், கோவில் அன்னதானத்தில் நரிக்குறவர் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக, அத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிலில் ஆய்வுசெய்தார். தனி செயல் அலுவலர் நியமிப்பதாகவும் தெரிவித்தார்.கும்பாபிஷேகத்திற்காக, திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ள தற்போது, சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் செயல் அலுவலராக பணியாற்றிய சிவசண்முக பொன்மணி, ஸ்தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE