சென்னை : 'விளையாட்டு சங்கங்களுக்கு நிதி அளித்த ஒரே காரணத்துக்காக, நிர்வாகிகளாக பதவி வகிக்க ஒருவருக்கு உரிமை இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய தடகள போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதிக்கவில்லை எனக்கூறி, உயர் நீதிமன்றத்தில், வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் பதிவை, ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்; தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த, நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:விளையாட்டு சங்கங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, நேரடி அமைப்பு இல்லை; சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் தான், ஒழுங்குபடுத்தப்படுகிறது. எனவே, விளையாட்டு அமைப்புகள், சங்கங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, சட்ட விதிகளை வகுக்க, மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டு சங்கமும், அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். சங்க உறுப்பினர்கள், பதிவு செய்த விளையாட்டு வீரர்கள், நிதி நிலவரம் என அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, மாநில அரசு மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் மாநிலப் பிரிவில், தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
சங்க நிர்வாகிகள் பொறுப்பில், விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தது 75 சதவீதம் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.விளையாட்டு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கிய ஒரே காரணத்துக்காக, சங்க நிர்வாகியாக பதவி வகிக்க ஒருவருக்கு உரிமை இல்லை.
விளையாட்டு போட்டிகளுக்கான பதிவை, 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்ள வேண்டும். போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, செலவான தொகையையும் ஆன்லைனில் வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு சங்கமும், தனித்தனியாக இணையதளம் துவங்கி, சங்கத்துக்கு வந்த நிதி விபரங்களை வெளியிட வேண்டும். தகுதியற்ற வீரர்கள், போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை, மூன்று மாதங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE