வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடிக்கு வலை விரிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் அளித்துள்ள புகார் மனு:மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு கும்பல், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்கள் வழங்கி, போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், மர்ம கும்பல், திருப்பத்துார் அருகே போலியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று, திருப்பத்துாரைச் சேர்ந்த சூர்யா, 25 உட்பட எட்டு பேரை கைது செய்தனர். இந்த கும்பல், 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த கும்பலை போலவே, மேலும் சிலர் தமிழகத்தின் பல பகுதிகளில் போலியாக நேர்முக தேர்வு நடத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, நேர்முக தேர்வு நடத்துவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம், ரொக்கமாகவோ, வங்கி மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாகவோ பண பறிமாற்றம் செய்ய வேண்டாம்.
அரசு மற்றும் தனியார் துறைகளில், பணம் கொடுத்து தான் வேலை வாங்க வேண்டும் என்று கூறுவோர் குறித்து, அவசர போலீஸ் எண். 100 மற்றும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE