வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'பாரதியார் எப்போதும் தன்னை பாரத தமிழராக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரை திலகத்துடன் உருவப்படுத்துங்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மக்களும், சமூக ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் துணிச்சலுடன் அரசு தந்த பொங்கல் பரிசு, நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகின்றனர். அதனால், மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க எண்ணும் முயற்சி பலன் அளிக்க போவதில்லை.
டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழக வாகனம் பங்கு பெற தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதி தலைசிறந்த தேசியவாதி. தீவிரமான ஆன்மிக பற்றுமிக்கவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே, பா.ஜ.,வின் தாரக மந்திரம். இந்த ஒவ்வாமையால் தான், நீங்கள் பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினீர்கள்.
பாரதியார், தி.மு.க.,வின் கொள்கைகளுக்கு எதிரானவர். தற்போது, தி.மு.க., அரசு நடைமுறைப்படுத்தும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழி பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் எதிர்த்து நின்றார். நீங்கள் அவரை காட்சிப்படுத்த வேண்டிய சூழலில், அவர் நெற்றியில் அணிந்திருந்த திருமண் திலகத்தை தவிர்த்து விட்டீர்கள். அவர் எப்போதும் தன்னை பாரத தமிழராக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரை திலகத்துடன் உருவப்படுத்துங்கள்.
தலைமைக்கு உயர்த்தும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் மற்றும் குயிலியின் தியாகம் மிக்க வாழ்க்கை, எந்த ஒரு சமூக பிரிவை சேர்ந்தவரையும் தலைமைக்கு உயர்த்தும் தகுதிமிக்கது. நீங்கள் மரபுரிமையாக அனுபவிக்கும் தலைமை பொறுப்பை அடைய, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் நிரூபித்தனர்.

தன்னிகரற்ற தேசியவாதியாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, தீவிரமான தேசப்பற்று மிக்கவர். அவர் எப்போதுமே தனி மாநிலம் பற்றி பேசியதில்லை. நாட்டிற்காக எடுத்த, உறுதியான நிலைப்பாட்டிற்காக, அவர் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். அவருடைய ஆன்மிக ஆளுமையும், தெய்வீக தன்மையும், ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற உத்வேகத்தையும் மறைக்க முடியுமா; மறுக்க முடியுமா?
வடிகட்டிய வரலாறு
தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து, பள்ளி பிள்ளைகளுக்கு உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றை தானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள். தமிழை தெய்வமாக நாங்கள் வணங்குவது போல, நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழில் இருந்து தோன்றிய உயர் சிறப்புமிக்க பிற தென்னிந்திய மொழிகளையும் ஒதுக்கினீர்கள்.
இதுபோல, உங்கள் காலத்தில் இருந்து துவங்கும், 'எடிட்' செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து, பள்ளி பாட புத்தகங்களில் வார்த்தைகளில் உண்மை வைத்து, வரலாறை எழுத வைத்து, இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை பள்ளி சிறார்கள் படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இறுதியாக ஒரு நினைவூட்டல், ஜனவரி 26 நாட்டின் குடியரசு தினமே தவிர, நம் சுதந்திர தினம் அல்ல. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE