சென்னை : மன வருத்தத்தில் பிரிவதாக அறிவித்துள்ள தனுஷ் -- ஐஸ்வர்யா தம்பதி, உறவினர்கள், நண்பர்கள் முயற்சியால் மீண்டும் இணைவரா என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளான தனுஷ் -- ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இருவரையும் பிரிய வைத்துள்ளது. தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்கள் உள்ள நிலையில், திருமணமாகி 18 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சை மற்றும் வதந்திகளை கடந்து வந்த பின், இந்த பிரிவு தேவை தானா என, தனுஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தனுஷ் தந்தை கஸ்துாரிராஜா கூட, 'இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. மனஸ்தாபத்தோடு தான் உள்ளனர். இருவரும் நிச்சயம் இணைவர்' என்று கூறியுள்ளார்.

அதேபோல தனுஷ் சகோதரர் செல்வராகவன், 'வேதனை உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இரண்டு நாள் கழித்து முடிவு எடுத்தால், அந்த பிரச்னையே இருக்காது. இல்லையென்றால் முடிவு எடுக்கும் சரியான மனநிலை இருக்காது' என கூறியுள்ளார்.
ரஜினி தரப்பிலும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இப்போதைக்கு தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே ஐதராபாத்தில் இருப்பதால், சென்னை வந்ததும் நேரில் பேச்சு நடத்த, இரண்டு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE