கோவை : ''டாஸ்மாக் தொடர்பாக விஷம பிரசாரம் செய்தால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், அதற்கு முன் ஒன்பது மாதம் மின் வாரியத்தில் பராமரிப்பு பணிகளே நடைபெறாமல் இருந்தது தெரியவந்தது. தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், 8,905 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டது.இதற்கு ரூ. 625 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணியை முதல்வர்தொடங்கி வைத்தார். தற்போது வரை 8,000 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவை அமைக்கும் பணி, இன்னும் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு விடும். கூடுதலாக தேவைப்பட்டாலும், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க அரசு தயாராக உள்ளது.
டாஸ்மாக் பார்களில் கடந்த காலங்களில் மாதம், 16 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்தது. இப்போது 28 கோடி ரூபாய் வருகிறது. மாதம், 12 கோடி ரூபாய் கூடுதலாக வருகிறது. கடந்த ஆட்சியில் நடந்த டெண்டரில், 6,400 பேர் கலந்து கொண்டனர். இப்போது, 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். யாரும் புகார் தெரிவிக்கவில்லை.அதிக விலைப்புள்ளி கேட்டவர்களுக்கு மட்டுமே டெண்டர் தர முடியும். இனி டாஸ்மாக் தொடர்பாக யாரேனும் விஷமத்தனமாக பிரசாரம் செய்தால், நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
'கொரோனா தொற்று தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுமா' என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், ''கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளின்படி அரசு செயல்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE