பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:குடியரசு தின அணி வகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை ஒதுக்கி வைப்பதால், பிரதமர் மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப் போவதில்லை. தமிழரின் பெருமையை பேசுவதில் மோடியை போல வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை.
தமிழக ஆளும் கூட்டணியின் தலைவர்களுக்கு, டில்லியில் எது நடந்தாலும், பிரதமர் மோடி தான் அதற்கு காரணம் என்பர். அந்த அளவுக்குத் தான் அவர்களுக்கு டில்லி பற்றி புரிதல் உள்ளது!
மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: பொய்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது தான் மோடி என்ற பிம்பம். அது உடைந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அதுவும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், அந்த பிம்பம் எடுபடவே இல்லை.
ஆனால், நீங்கள் சொல்லும் அந்த பிம்பம் தான், இந்த நாட்டை ஏழு ஆண்டுகளாக ஆள்கிறது. குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியது. இதை மறந்து விட்டீர்களா?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்க மாநில அரசின் அலங்கார ஊர்திக்கும், குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை கண்டிக்கிறோம்.
திரிணமுல் காங்கிரசுக்கு, 22 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வர். நம் மாநிலத்தில், உங்களின், சிதம்பரம் தனித் தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற குரல் கொடுத்தாலாவது ஓட்டு போட்ட மக்கள் மகிழ்வர்!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ஏழு ஆண்டு கால, பா.ஜ., ஆட்சியின் கொடும் சட்டங்களால், நாட்டு மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்த சீற்றத்தை வெளிப்படுத்த தடை செய்தால், நடப்பது மன்னராட்சியா; மக்களாட்சியா என்ற கேள்வி எழுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வசனம் போல அறிக்கை விட்டுள்ளீர்கள். ஆனால், நீங்கள் கூறுவது போல எதுவுமே நடக்கவில்லையே!
அ.தி.மு.க., முன்னாள் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி: எங்களின் ஆட்சியில், கால்நடை மருத்துவமனைகளில், 588 டாக்டர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த பணியிடங்களை, தி.மு.க., அரசு நீக்கியுள்ளது. இதனால், தாலுகாவுக்கு ஒரு டாக்டர் தான் என்ற மோசமான நிலை உள்ளது.
அந்த நியமனங்களை நிறுத்தி விட்டு, புதிதாக நியமனம் செய்தால் தானே, கட்சியினர் நாலு காசு பார்த்து, வளமாக இருப்பர் என, மாநில அரசு நினைக்கிறதோ?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE