கோவை: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் மூன்றில் இரண்டு பங்கு கடைகளிலிருந்து ரூ.34 கோடி வாடகை வசூலிக்கப்பட வேண்டுமென்ற, தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பழ மார்க்கெட் போன்றவை கட்டப்பட்டு, 2826 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மாநகராட்சி விதிகளின்படி, முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த கடைகள் ஏலம் விடப்பட்டன.
2012க்குப் பின், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 15 சதவீத வாடகையை உயர்த்தி, ஒன்பது ஆண்டுகள் வரை கடைகளை நடத்த, அனுமதிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தில் பகீர்!
கோவை மாநகராட்சி கடைகளின் வாடகை பாக்கி குறித்த விபரங்களை, சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கியுள்ளது.அதில் கிடைத்துள்ள விபரங்கள் பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.ஒட்டு மொத்தமாக மாநகராட்சிக்குச் சொந்தமான 2826 கடைகளில், 1915 கடைகளிலிருந்து 34 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 571 ரூபாய், வாடகை வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பதே அந்த அதிர்ச்சி மிகுந்த தகவல்.இவற்றில் பெரும்பாலான கடைகள், 2012ம் ஆண்டிலிருந்தே வாடகை செலுத்தாமல் உள்ளன. இவ்வாறு வாடகை செலுத்தாத கடைகளை, 2015ல் அல்லது 2018ல் 'சீல்' வைத்து ஏலம் விட்டிருக்கலாம்.
அரசியல் தலையீடே காரணம்
ஆனால் அரசியல் தலையீடு காரணமாக, வாடகை வசூலிக்கப்படாமலும், கடைக்கு 'சீல்' வைக்காமலும் இருந்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவற்றில் வாடகை செலுத்தாத 150 கடைகளுக்கு, தற்போதுள்ள மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலின் அதிரடியால் 'சீல்' வைக்கப்பட்டது.
அதன் பலனாக ரூ.11 கோடி வரை வசூலாகியுள்ளது.கொரோனா காலத்தில், ஊரடங்கு காரணமாக வாடகை செலுத்த முடியவில்லை என்று கடைக்காரர்கள் பலரும் பதிலளித்துள்ளனர். அதனால், கொரோனா காலத்துக்கு முன்பாக, அதாவது 2020 மார்ச் மாதத்துக்கு முன்பு வரையிலான நிலுவையைச் செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

அதையும் செலுத்தாவிடில், கடைகளை 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வளர்ச்சிப்பணிகள் இதனால் ரத்துபெரும்பாலான கடைகள், உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அத்தகைய கடைகளை, கடை நடத்துவோர்க்கே மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி இறங்கியுள்ளது.
நிதிச்சுமை காரணமாக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்யும் நிலையில் உள்ளது. இந்த நிலையிலும், கடை வாடகையைச் செலுத்தாதவர்களிடம் மாநகராட்சி கனிவு காட்டத்தேவையில்லை என்பதே மக்களின் கருத்தாகவுள்ளது.
நுாறு பேர்... ஆறு கோடி ரூபாய் பாக்கி!
மாநகராட்சிக் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்களில், 100 பேர் வரையிலும் இரண்டிலிருந்து ஐந்து கடைகள் வரை எடுத்திருக்கின்றனர். இவர்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியே, ஆறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.அதேபோன்று, மாநகரின் மத்தியிலுள்ள பாஸ்போர்ட் ஆபீஸ் வணிக வளாகத்தில் 32 கடைகளில் 27 கடைகள், ஐந்து கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளன.இவற்றில், பத்திரிக்கையாளர் அமைப்பு ஒன்றும், 2012ம் ஆண்டிலிருந்து இரண்டு கடைகளுக்கு மாதத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் வீதமாக 48 லட்ச ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் இருக்கிறது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டபோது, அவர் உதவி கமிஷனர் (வருவாய்) செந்திலிடம் விபரம் கேட்குமாறு பதிலளித்தார். உதவி கமிஷனரிடம் பதில் பெறவே முடியவில்லை.
மண்டலங்களில் வரவேண்டிய வாடகை
மத்திய மண்டலத்திலுள்ள 1467 கடைகளில் 1198 கடைகளிலிருந்து 23 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 81 ரூபாய் வாடகை வர வேண்டியுள்ளது.மேற்கு மண்டலத்திலுள்ள 625 கடைகளில் 227 கடைகள், 6 கோடியே 91 லட்சத்து 36 ஆயிரத்து 962 ரூபாய் பாக்கி வைத்துள்ளன.தெற்கு மண்டலத்தில் 445 கடைகளில் 267 கடைகள், ஒரு கோடியே 3 லட்சத்து 98 ஆயிரத்து 687 ரூபாய் பாக்கி வைத்துள்ளன.வடக்கு மண்டலத்திலுள்ள 211 கடைகளில் 148 கடைகள், ஒரு கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 129 ரூபாய் வர வேண்டியுள்ளது.கிழக்கு மண்டலத்திலுள்ள 78 கடைகளில், 75 கடைகள், 94 லட்சத்து 28 ஆயிரத்து 712 ரூபாயும் வாடகை பாக்கி வைத்திருப்பதாக, மாநகராட்சி சார்பில் தகவல் தரப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE