இடா நகர்: அருணாசல பிரதேச எல்லைக்குள் புகுந்து 17 வயதான சிறுவனை சீன ராணுவத்தினர் கடத்தி சென்றதாக தாபீர் காவோ எம்.பி., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்த எம்.பி., கூறியதாவது: அருணாசல பிரதேச மாநிலம் அப்பர் ஷியாங் மாவட்டம் லங்டா ஜார் பகுதியை சேர்ந்த மிரம் தரோன்(17) என்ற சிறுவனை நேற்று முன்தினம் சீன ராணுவத்தினர் கடத்தி சென்றனர். சாங்போ நதி, இந்திய எல்லைக்குள் நுழையும் இடத்தின் அருகே சிறுவன் கடத்தப்பட்டார். (சாங்போ நதி அருணாச்சல பிரதேசத்தில் ஷியாங் எனவும், அசாமில் பிரம்மபுத்ரா எனவும் அழைக்கப்படுகிறது.)

அவருடன் இருந்த ஜானி யாயிங் என்ற மற்றொரு சிறுவன், அங்கிருந்து தப்பி வந்து கடத்தல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மிரம் தரன் மற்றும் ஜானி யாயிங் இருவரும் உள்ளூர் வேட்டைக்காரர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் எதிர்காலமான சிறுவன் சீனாவால் கடத்தி செல்லப்பட்டார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்கிறோம். பிரதமர் மவுனமாக உள்ளார். இது குறித்து அவர் கவலைப்படவில்லை எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: மிரம் தரோன் உள்ளூர் வேட்டைக்காரர். வழி தவறி வந்துவிட்டார். இது தொடர்பாக சீன ராணுவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். பாதுகாப்பு நடைமுறைகளின்படி பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு செப்., மாதம் 5 இளைஞர்களை கடத்தி சென்ற சீன ராணுவம் ஒரு வாரத்திற்கு பின் விடுவித்தது. அதேபோல், அதே ஆண்டு மார்ச் மாதம் 21 வயதான இளைஞர் சீன ராணுவத்தினரால் கடத்தி செல்லப்பட்டார். பின்னர், இந்திய ராணுவத்தின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE