வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: 'பிரதமரின் தேசிய கல்விக் கொள்கை, கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் புலம் மற்றும் தேசிய கல்வியியல் கழகம் இணைந்து, 'ஆசிரியர்களுக்கான தொழில்முறை தரநிலை' குறித்த பொது கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இணைய வழியில் நடந்த கருத்தரங்கில், தேசிய கல்வியியல் கழகத் தலைவர் சந்தோஷ்குமார் சாரங்கி, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், தேசிய கல்விக் கழகத்தின் உறுப்பினர் செயலர் கேசங் யாங்சோம் ஷர்பா, கல்வியியல் புல முதல்வர் செல்லமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![]()
|
கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: மனிதனின் உடல், மனம், ஆன்மா அனைத்திலும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவதே கல்வி. காந்தியின் இக்கருத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையை நமக்கு அளித்துள்ளார்.
அது, கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது, உலகத் தரத்திலான பல்நோக்கு கல்வி நிறுவனங்களை உருவாக்க முக்கியத்துவம் தருகிறது. மாணவ விருப்பத்திற்கு ஏற்ற தொழிற் கல்வியை பள்ளி அளவிலேயே கற்றுத்தரப்படும். கலை, அறிவியல் என்ற பாகுபாடு இருக்காது.கொரோனா தொற்று, கல்வித் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கல்வித் துறையை நவீனமயமாக்குவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது.
![]()
|
இன்று வகுப்பறை கல்வி முறையிலிருந்து இணையவழிக் கல்வி முறைக்கு நாம் மாறி உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது, எதிர்கால பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் அடுத்த தலைமுறையை உருவாக்குவது. மற்ற எல்லா பணிகளுக்கும் ஆசிரியர் பணியே அடிப்படை.கல்வி கற்பிக்கும் போது, அரசியல் சாசனம் முன்வைக்கும் அடிப்படை கடமைகளை போதிப்பது, நல்ல குடிமக்களை உருவாக்க வழிவகுக்கும். இவ்வாறு கவர்னர் பேசினார்.