தடுப்பூசியைத் தடுக்கும் கற்பனைகள்!சிலர் கோவிட்-19 தடுப்பூசிகளை போடாமல் தவிர்ப்பதற்கு, பக்க விளைவுகள் குறித்த தயக்கத்தையே காரணம் சொல்கின்றனர். ஆனால், தடுப்பூசி போடுவோரில் பாதிப்பேர் சொல்லும் பக்க விளைவுகள், வெறும் கற்பனையே என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது குறித்து 'ஜாமா நெட்வொர்க் ஓபன்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு, சுவையான தகவலை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து நடத்தப்பட்ட 12 ஆய்வுகளின் தரவுகளை சேகரித்து, ஒரு கூட்டு ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். மொத்தமாக, 45 ஆயிரம் பேர்களிடம் சேகரிக்கப்பட்ட தரவுகள் அவை.
அதில், ஒரு பகுதியினருக்கு அசல் தடுப்பூசிக்குப் பதில், 'பிளாசிபோ' எனப்படும் வெற்றுத் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. பிளாசிபோ ஊசி போட்டுக்கொண்டோரில் 35 சதவீதத்தினர், தலைவலி, உடல் சோர்வு போன்ற பக்கவிளைவுகள் இருப்பதாக தெரிவித்தனர்.அசல் தடுப்பூசி போட்டோரில், 46 சதவீதம் பேர் பக்கவிளைவுகள் இருப்பதாக தெரிவித்தனர். இரண்டாவது தடுப்பூசியின்போதும், பிளாசிபோ குழுவினரில் 32 சதவீதத்தினரும், அசல் தடுப்பூசிக் குழுவினரில் 61 சதவீதத்தினரும் பக்கவிளைவுகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், பக்கவிளைவுகள் இருப்பதுபோல சிலருக்கு கற்பனையாகவும் தோன்றும் என்ற தகவலை, முன்கூட்டியே தெரிவித்தால், மேலும் பலர் தாமாகவே முன்வந்து கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE