மரம் விதைக்கும் ட்ரோன்கள்!காடுகளின் பசுமைப் போர்வையை அதிகரிக்க, புதிதாக மரங்களை விதைக்கவேண்டும். இந்தப் பணிக்காக மனிதர்களைப் பயன்படுத்துவதைவிட, ட்ரோன்களையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளையும் பயன்படுத்தினால், வேலை வேகமாக நடக்கும் என்கிறது ஆஸ்திரேலியாவின் 'ஏர் சீட் டெக்னாலஜி' நிறுவனம்.உலகின் கார்பன் மாசுபாட்டை காற்றிலிருந்து அகற்றும் பணியை மரங்கள் செய்கின்றன.
ஆனால், காடுகள் அழிக்கப்படுவதால், ஆண்டுதோறும், 13.5 லட்சம் டன்கள் கார்பன் மாசுபாட்டை அகற்றுவது தடைபடுகிறது. புவி வெப்பமாதல் வேகமெடுப்பதை தடுக்க இன்னும் பத்தே ஆண்டுகள் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், வேகமாக காடுகளை புதுப்பிக்க ட்ரோன்கள் மூலம் விதைகளை வீசுவது உதவும் என 'ஏர் சீட்' நிறுவனர்கள் கருதுகின்றனர்.ஏர் சீடின் விதைப்பு முறை மிகவும் அறிவியல்பூர்வமானது. வனப்பகுதியில், எங்கே விதைக்கவேண்டுமோ, அந்தப் பகுதிக்கு நேராக ஏர் சீட் பணியாளர்கள் செல்கின்றனர்.
அந்த நிலத்தின் மண் வளம், அருகாமை மரங்களின் வகைகள் போன்றவற்றை அலசி, வரைபடம் அமைத்து திட்டமிடுகின்றனர். அதன் பிறகு, அப்பகுதிக்கான விதைகளை நன்கு நேர்த்தி செய்து, சத்துக்கள் அடங்கிய உருண்டைகளில் வைத்து அதன் பிறகே, ட்ரோனில் ஏற்றி விதைக்க அனுப்புகின்றனர்.
ஒரு ட்ரோனால், ஒரு நாளைக்கு 40 ஆயிரம் விதைகளை விதைக்க முடியும். மனிதர்களைவிட 25 மடங்கு வேகமாகவும், 80 சதவீதம் மலிவாகவும் மரம் விதைக்கும் பணியை ஏர் சீடின் ட்ரோன்கள் செய்து முடிக்கின்றன. வரும் 2024க்குள் 10 கோடி மரங்களை விதைக்க ஏர் சீட் திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE