எதுக்காக டில்லி போகணும்?
வி.பாஸ்கர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்லறையில் குழி தோண்டி புதைத்து, அதன் மீது சமாதியும் கட்டிய பின், அந்த பிணத்திற்கு உயிர் கொடுத்து எழுப்பி உட்கார வைக்க
முடியுமா?முடியாதல்லாவா?ஆனால், அப்படி ஒரு உயிர் கொடுத்து எழுப்பி உட்கார வைக்கும் முயற்சியில் தான், தி.மு.க., அரசு ஈடுபட்டிருக்கிறது.
தி.மு.க.,வின் உள் நோக்கம் புரியாத, தமிழகத்தில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், அந்த முயற்சிக்கு பின்பாட்டு பாடுகின்றன.
தமிழக அனைத்து கட்சி குழுவைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 12 நிமிடங்கள் பேசி இருக்கின்றனர்.
குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்வதற்கே, 10 நிமிடங்கள் ஆகி இருக்கும். அடுத்து பிஸ்கட் சாப்பிட்டு, தேநீர் பருக வேண்டும். மீதி எத்தனை நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடந்திருக்கும் என்பதை நீங்களே
யூகித்துக் கொள்ளுங்கள். இந்த டில்லி பயணம், தமிழக மக்களையும், மருத்துவம் பயில விரும்பும் தமிழக மாணவர்களையும் திசை திருப்புவதற்காக மட்டுமே பயன்படும்; ஒருபோதும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்கவே
கிடைக்காது.தாயத்து விற்கும் வியாபாரி, 'பாம்புக்கும், கீரிக்கும் சண்டை விடுவேன்' என்று சொல்லி சொல்லியே கூட்டத்தை கலைய விடாமல் நிறுத்தி வைத்திருந்து, காரியத்தில் கண்ணாக, தாயத்து விற்பனையில்
ஈடுபடுவான்.அதுபோல, தி.மு.க., அரசு இந்த, 'நீட் தேர்வு விலக்கு' என்ற வார்த்தையை வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.இவர்களது மாய்மால பசப்பு வார்த்தைகளை நம்பி கொண்டிராமல், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுதோறும் தயாராகி கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு கூட, மூன்று லட்சம் தமிழக மாணவர்கள் அந்த நீட் தேர்வை எழுதி இருப்பதாக தெரிகிறது.தி.மு.க., அரசு, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மான நகலை, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியிடம் கொடுத்து, விளக்கம்
கேட்டிருக்கலாம்.அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பதை விபரமாக, தெளிவாக, பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூறி இருப்பார்.
தேவையில்லாமல், ஏன் டில்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்?அதாவது, 'டில்லியில் கோரிக்கை மனு கொடுத்தோம்' என்று சொல்லியே, அடுத்த ஒரு ஆண்டை ஒப்பேற்றி
விடலாம் என்பது தான், தி.மு.க.,வின் தந்திரம்!
இப்போது மட்டும் ஹிந்தி தெரியுமா?
பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதில் உள்ள பொருட்கள், தரமின்றி இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிளம்பி உள்ளது.
அந்த பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களில் நெய், கரும்பு மட்டுமே, தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை; மற்ற அனைத்துமே, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை!
வெளிமாநிலத்தில் குறைந்த விலைக்கு கிடைப்பதால், அங்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன; அதனால் தான், அந்த பொருட்கள் தரமின்றி உள்ளன.
இந்த பொருட்கள் எல்லாம், தமிழகத்தில் கிடைக்கும்; அப்படி இருந்தும், தி.மு.க., அரசு அவற்றை ஏன் வாங்கவில்லை? இங்கே கொள்முதல் செய்திருந்தால், தமிழக மக்களின் வாழ்வாதாரம்
உயர்ந்திருக்குமே!பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் எல்லாம், 'கமிஷன்' எனும் கொள்ளைக்காகத் தான், பிற மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.பொருட்களின் தரம் குறித்து புகார் செய்ய, தமிழக அரசின் சார்பில், ஒரு தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது; அந்த எண்,
உபயோகத்திலேயே இருப்பதில்லை.தி.மு.க.,வினர், 'ஹிந்தி தெரியாது போடா' என, சில மாதங்களுக்கு முன் அலப்பறை செய்தனர். இன்று தி.மு.க., அரசு, ஹிந்தியில் பெயர் இடம்பெற்றுள்ள பொருட்களை கொள்முதல் செய்து, தமிழக மக்களுக்கு வினியோகித்து வருகிறது.
இப்போது மட்டும், 'ஹிந்தி தெரியும் வாடா' எனக் கூறுவரா?பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மாநிலத்தில் நடப்பவை எல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா?பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு புகார் கிளம்பியும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?
மக்கள் மாற வேண்டும்!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவெளியில் முககவசம் அணியாமல் சுற்றுபவருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை, 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி,
தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு இல்லாமல், பொது வெளியில் அதிகம் சுற்றுவோர், படித்தோர் மற்றும் நகரத்தில் இருப்போர் தான்.
கிராம மக்கள் தங்கள் வேலையுடன், வீட்டிலேயே தங்கி விடுகின்றனர். அவர்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதில்லை. மேலும், கிராமத்தில் போதுமான சமூக இடைவெளி
கிடைக்கிறது.நகரத்தில் வசிக்கும் இளைஞர்கள் பலர், வீட்டிற்குள் இருப்பதை விரும்புவதே இல்லை. தேவையின்றி வெளியில் சுற்றுகின்றனர்.
கொரோனா இரு அலையிலும், பெரும் பாதிப்பை சந்தித்த போதும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது 'ஒமைக்ரான்' வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில், இன்றும் பல கோடி பேர் முககவசம் அணியாமல் தான் பொதுவெளியில் சுற்றுகின்றனர்.இவர்களை எல்லாம் பிடித்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கத் துவங்கினால், தினமும் பல கோடி ரூபாய் வருமானம், அரசுக்கு கிடைக்கும். 'டாஸ்மாக்' வருமானத்தை விட, இதில் பல 100 கோடி ரூபாய்களை அள்ளி விடலாம் என, அரசு கணக்கு போடுகிறதோ?
இதுவரை, 50 லட்சம் பேருக்கு அபராதம் விதித்து, 105 கோடி ரூபாய் அரசு வசூலித்துள்ளதாம்.அரசின் அபராத தொகை மட்டும், மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. முககவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி என கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது, மக்களின் இயல்பாக மாற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE