'வசூல்' உதவியாளர்கள் மாற்றம் எப்போது?
நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''அதிகாரிகளுக்குள்ள மோதல் வெடிச்சிருக்கு பா...'' முதல் தகவலுக்கு வந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில, எதுக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை எழும்பூருல, பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அலுவலகம் இருக்கு... ஆட்சி மாற்றத்துக்கு அப்புறம், புதிய உறுப்பினர் செயலர் நியமிக்கப்பட்டாரு பா...
''நகரமைப்பு திட்டமிடல் தொடர்பாக தனியார் கலந்தாலோசகர், நகரமைப்பு பயிற்சி பட்டதாரிகளை பயன்படுத்தி முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுதாம் பா...
''அதுல எடுத்த முடிவுகளை செயல்படுத்த மட்டும், 'சீப் பிளானர்'களுக்கு உத்தரவு வருதாம்... இதனால அதிருப்தியான, 'சீப்' மற்றும் 'சீனியர்' பிளானர்கள் கூட்டத்துல இருந்தும், 'வாட்ஸ் ஆப்' குழுவுல இருந்தும் வெளியேறிட்டாங்களாம் பா...
''சி.எம்.டி.ஏ., வரலாறுலேயே இப்படி ஒரு மோதல் இதுவரை வந்ததில்லைன்னு, ஊழியர்கள் பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''தி.மு.க., ஆட்சிக்கு வந்தப்புறம், கள்ளசந்தை மது விற்பனை புகார் அதிகமா வருதுங்க....'' என, அடுத்த தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''ம்... விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கோவை மாவட்டம், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில, கள்ளசந்தை மது விற்பனை பட்டையை கிளப்புதுங்க...
''குரும்பபாளையம், கீரணத்தம், காளப்பட்டி பகுதி தாபா ஓட்டல்கள்லேயும், கோவில்பாளையம் டாஸ்மாக் கடை பக்கத்துலையும், 24 மணி நேரமும் தடையில்லாமல் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்குதுங்க...
''வழக்கம் போல மாமூல் காரணமாக போலீசாரும் கண்டுக்குறது இல்லைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''அடாவடி வசூல் உதவியாளர்களை எப்போ மாத்துவாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்ன விஷயமுன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்துல, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இருக்கு... சார் - பதிவாளர்கள் மாற்றத்தால் ஏற்பட்ட காலி இடங்கள்ல, உதவியாளர்களே, பொறுப்பு சார் - பதிவாளர்களாக செயல்படுறாவ... இது வெறும் தற்காலிக ஏற்பாடு தான் வே...
''ஆனால் சில ஆண்டுகளாக, அவங்க அதே பதவியிலே தொடர்ந்து இருக்காவ... இதுக்கு அந்தந்த பகுதி மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் மறைமுகமாக உதவுறாவ வே...
''இந்த உதவியாளர்கள், சார் - பதிவாளர் பதவியிலே இருக்குறப்போவே சம்பாதிக்கணுமுன்னு, பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடுறாவ... முறைகேடாக வரும் பத்திரங்களையும் பதிவு செஞ்சு மோசடியில ஈடுபடுறாவ வே...
''பதிவுத்துறையில, இடமாறுதலுக்கு புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ள நிலையில, 15 நாட்களுக்கு மேல், உதவியாளர்கள் பதிவு பணியில தொடர முடியாது... இருந்தும், 150க்கும் மேற்பட்ட இடங்கள்ல, உதவியாளர்களே பொறுப்பு சார் - பதிவாளர்களாக
தொடருறாவ வே...
''இதுல பலர், நாலு வருஷத்துக்கு மேல ஒரே அலுவலகத்துல பணியில இருக்காவ... இவங்களை சீக்கிரம் மாத்தணுமுன்னு, பதிவுத்துறை ஊழியர்கள் பேசிக்கிறாவ வே...'' என முடித்தார்,
அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE