பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், இளம் காளைக்கன்றுகளை, ரேக்ளா வண்டியில் பிணைத்து சவாரிக்கு பயிற்சி அளிப்பதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு மண் சார்ந்த வீர விளையாட்டு பிரபலமாக இருக்கும். அந்த விளையாட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வியலுடன் கலந்து, பிரிக்க முடியாததாக மாறி இருக்கும். நவீன மயமானாலும், அந்த பாரம்பரிய விளையாட்டையும், அம்மக்களையும் பிரிக்கவே இயலாது. அப்படி, பொள்ளாச்சி பகுதி மக்களுக்கு, ரேக்ளா பந்தயம் பாரம்பரிய விளையாட்டாக உள்ளது.ரேக்ளா பந்தயத்தின் அடிப்படை, ஆரோக்கியமான, பலம் வாய்ந்த, நன்கு பயிற்சி பெற்ற காளை மாடுகள் தான். ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து, 'ஜாக்கி'யின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் காளை ஜோடிகள் தான், வெற்றிக்கனியை பறிக்க முடியும். இதற்காக, காளைகளை பயிற்றுவிப்பதற்கு அதிகபட்ச முக்கியத்துவம் தருவது வழக்கம்.குறிப்பாக, வண்டியில் பூட்டி பயிற்சி பெறும் பருவம் அடைந்த இளம் கன்றுகளை, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வழிபட்டு கொண்டாடி, மறு நாளான பூப்பொங்கல் அன்று, வண்டியில் பூட்டி பயிற்சியை துவங்குவது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.இந்தாண்டு பூப்பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, வழக்கமான காளை பயிற்சியை துவங்க இயலவில்லை. இதனால், தைப்பூச நாளன்று, காளைகளை வண்டியில் பூட்டி, இருசக்கர வாகனங்களில் ஆட்கள் தொடர, பாதுகாப்புடன், இளைஞர்கள் பயிற்சியை துவங்கினர்.முதல் நாளில் ஆளில்லா ரோடுகள், தோட்டத்து பாதைகளில் நடந்த பயிற்சியால் காளைக்கன்றுகள் பயம் விலகியதும், பிரதான ரோடுகளில் பயிற்சியளிக்கின்றனர். இப்படி பயிற்றுவிக்கப்படும் காளைகளில், வேகம் மற்றும் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகமுள்ளவை கண்டறியப்பட்டு, ஜோடி சேர்க்கப்பட்டு, ரேக்ளா பந்தயங்களில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும், என, இளைஞர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE