'மாஜி' அமைச்சர் அன்பழகன் வீடுகளில் 'ரெய்டு!'

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான, கே.பி.அன்பழகன் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி 'ரெய்டு' நடத்தினர். மனைவி, மகன், மருமகள், பினாமிகள் வீடு, அலுவலகம், நிறுவனங்கள் என, 58 இடங்களில் சல்லடை போட்டு தேடி, 2.65 கோடி ரூபாய் ரொக்கம், 7 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 'இது பழிவாங்கல்
மாஜிஅமைச்சர், அன்பழகன், வீடுகள், ரெய்டு

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான, கே.பி.அன்பழகன் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி 'ரெய்டு' நடத்தினர். மனைவி, மகன், மருமகள், பினாமிகள் வீடு, அலுவலகம், நிறுவனங்கள் என, 58 இடங்களில் சல்லடை போட்டு தேடி, 2.65 கோடி ரூபாய் ரொக்கம், 7 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 'இது பழிவாங்கல் நடவடிக்கை' என, அ.தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.


தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் ஊழல் பட்டியல் தயாரித்து, கவர்னரிடம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் அமைச்சர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசி வந்தார்.
ஆட்சிக்கு வந்ததும், லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்தினார். இப்பிரிவு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், வீரமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் இவர்களின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என, 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


நீதிமன்றத்தில் வழக்கு


இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், மோளையானுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், அ.தி.மு.க., ஆட்சியில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பழகன், 62, மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'அன்பழகன், தன் மனைவி, மகன்கள், மருமகள், உறவினர்கள், பினாமிகள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, அன்பழகனின் ஊழல்கள் குறித்து விசாரித்தனர். அப்போது, அன்பழகன், தன் மனைவி மல்லிகா, 55, மகன்கள் சந்திரமோகன், 32, சசிமோகன், 29, மருமகள் வைஷ்ணவி, 32, ஆகியோர் மற்றும் பினாமிகள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக, 11.33 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது தெரியவந்தது. இந்த முறைகேடு, அன்பழகன் அமைச்சராக இருந்த, 2016 ஏப்ரல் 27ல் இருந்து, 2021 மார்ச் 15 வரை நடந்துள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில், அன்பழகன், மனைவி, இரு மகன்கள், மருமகள் ஆகியோர் மீது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1:30 மணியளவில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தர்மபுரி மாவட்டம், கெரகோடஹள்ளியில் உள்ள அன்பழகன் மற்றும் உறவி னர்கள், நண்பர்கள், பினாமிகள் வீடு, அலுவலகம், கல் குவாரி என, 53 இடங்களில் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சேலம் ஒன்று, சென்னையில் மூன்று, தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் ஒன்று என, மொத்தம் 58 இடங்களில், மாலை 6:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டு, 2.65 கோடி ரூபாய் ரொக்கம், 7 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வங்கி 'லாக்கர்' சாவி மற்றும் ஊழல் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


அன்பழகனின் அபார வளர்ச்சி


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியை சேர்ந்தவர் அன்பழகன். இவர், காரிமங்கலத்தில் ஆரம்ப காலத்தில் லாரிகள் இயக்கி வந்ததுடன், திரையரங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார். பின், 1996ல் மாவட்ட கவுன்சிலராகத் தேர்வாகிய அன்பழகன், 2001 சட்டசபை தேர்தலில், பாலக்கோடு தொகுதியில், அ.தி.மு.க., சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது அணுகுமுறையால் செய்தித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.


பின், உள்ளாட்சி துறை அமைச்சரானார். அதைத் தொடர்ந்து, 2006, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். பின், 2014ல் தர்மபுரி லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பாக மோகன் போட்டியிட்ட போதும், பா.ம.க., வேட்பாளரான, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக அன்பழகன் செயல்பட்டதாக, ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அன்பழகனிடமிருந்த மாவட்ட செயலர் பதவியை ஜெயலலிதா பறித்தார். மீண்டும், மாவட்ட செயலர் பதவி வழங்கியதுடன், 2016ல் வெற்றி பெற்றதையடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2021 தேர்தலிலும் பாலக்கோடு தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


அ.தி.மு.க., கண்டனம்


கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரது அறிக்கை:அ.தி.மு.க., தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஆயுதத்தை, தொடர்ந்து தி.மு.க., அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்ததால், முன்னாள் அமைச்சரான, எம்.எல்.ஏ., அன்பழகன் தொடர்புடைய இல்லங்களில் தற்போது சோதனை நடக்கிறது. சில தினங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கை தான், இந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


எம்.எல்.ஏ., வீட்டிலும்


மேலும் தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள அன்பழகனின் மாமனார் அப்புனு கவுண்டர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமியின் வீடு, நேரு நகரிலுள்ள, அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீடு, அன்னசாகரத்திலுள்ள, அ.தி.மு.க., நகர செயலர் ரவி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

அதேபோல, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், ஆடிட்டர் பழனிசாமி வீடு, அலுவலகங்கள், காந்தி நகரிலுள்ள அங்குராஜ் வீடு, கான்ட்ராக்டர்கள் இக்பால், பாஸ்கர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும், பென்னாகரம் அடுத்த தாளப்பத்திலுள்ள, தர்மபுரி ஆவின் சேர்மன் டி.ஆர்.அன்பழகன் வீடு; பாலக்கோட்டில் ஐந்து இடங்கள்; மாரண்டஹள்ளியில் எட்டு இடங்கள்; பாளையம்புதுாரில் இரு இடங்கள்; அரூரில் பி.டி.ஆர்.வி., தனியார் பள்ளியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


'பழிவாங்கல்'


அன்பழகன் வீடு முன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்ணன், பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் மற்றும் அ.தி.மு.க.,வினர் குவிந்தனர். 'இது பழிவாங்கும் நடவடிக்கை' என, முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கோஷம் எழுப்பினர். முக கவசம் அணியாமல் அன்பழகன் வீட்டுக்கு வந்தோரை, போலீசார் தடுத்ததால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செங்கோட்டையன் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் அன்பழகன், சிறந்த முறையில் களப்பணியாற்றக் கூடியவர். தொடர்ந்து ஐந்து முறை பாலக்கோடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற உழைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, இதுபோன்ற சோதனகள் நடப்பது வழக்கம் தான். நீதிமன்றம் வாயிலாக நிரபராதி என நிரூபிப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.பழனிசாமி குற்றச்சாட்டு


முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:கொரோனோவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 21 ஆயிரத்து, 981 என கணக்கு காட்டுகின்றனர். ஆனால், 40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பேர் வரை, அதன் பாதிப்பு உள்ளது.மக்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், 600 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை, 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, நிர்வாக திறமையற்ற அரசு. பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு செய்துள்ள அரசு, இக்குற்றச்சாட்டுகளை மறைக்க, முன்னாள் அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்துகிறது.இவ்வாறு அவர் கூறினர்.


முதல் தகவல் அறிக்கையில்...


அன்பழகன், பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராகவும், 2020 நவ., 1 முதல், 2020 மே 6 வரை வேளாண்மை துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். இவர், 2016 சட்டசபை தேர்தலில் பிரமாண பத்திரம் தாக்கலின் போது, கூட்டு குடும்பமாக இருப்பதாகவும், குடும்ப தலைவராக தன் பெயரையும் பதிவு செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, 2016 - 2021 காலக்கட்டத்தில் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.இந்த சொத்துக்களில், 50 சதவீத பங்கு ஸ்ரீ பாக்யலட்சுமி தியேட்டர், 50 சதவீத பங்கு எஸ்.எம்., 'ப்ளூ மெட்டல், ஏ.எம்.பி.எஸ்., என்டர்பிரைசஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளன.

மகன்கள் பெயரில் கிளினிக், மனைவி குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சரஸ்வதி பழனியப்பன் கல்வி அறக்கட்டளை உள்ளிட்டவைகளை தொடங்கியுள்ளதும் தெரிகிறது. தேர்தலில் அளித்துள்ள சொத்து விபரங்கள் அடிப்படையில், அன்பழகனிடம், 10 கோடியே, 10 லட்சத்து, 39 ஆயிரத்து, 663 ரூபாய் இருக்க வேண்டும். ஆனால் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே, 32 லட்சத்து, 95 ஆயிரத்து, 755 ரூபாய் சேர்த்துள்ளதும் தெரிந்துள்ளது.


காரிமங்கலம் காளப்பனஹள்ளி பகுதியில் 'ஹாட் மிக்ஸ்' ஆலை, கல் குவாரி ஆலைகள் மருமகன் ரவிசங்கர், மைத்துனர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோரது பெயரில் நடத்தி வருவதும், சென்னை, கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில், 'கணபதி கிரானைட்ஸ்' என்ற தொழிற்சாலையை தங்கை மகள் தீபா, மருமகன் சிவகுமார் பெயரில் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. அதில், 80 சதவீத பங்குகளை மருமகன் சிவகுமார் வைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம், கரீம்நகரில், மருமகள் பெயரில் 'வைஷ்ணவி கிரானைட் இண்டஸ்ட்ரீஸ்' வைத்துள்ளார். மேலும் தமிழகம், வெளி மாநிலங்களில், தன் குடும்பத்தார், நண்பர்கள் பெயரில், ஏராளமான சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.சிறை தண்டனை


அன்பழகன் மற்றும் குடும்பத்தார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதம் முதல், ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


கனிம வள அதிகாரி பங்களாவில் சோதனை


சேலம், இரும்பாலை, ராசி நகரை சேர்ந்தவர் ஜெயபால், 57. இவர், கனிம வளத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். 2013 முதல், 2019 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமானார்.
தற்போது கரூரில் பணிபுரியும் நிலையில், அவரது சேலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.


'இட்லி, தோசை


பாலக்கோடு, அனுமந்தபுரம், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முதியவர்கள், பெண்கள், ஆண்களை அ.தி.மு.க., நிர்வாகிகள் வேனில் அழைத்து வந்து, அன்பழகன் வீடு முன் கூட்டத்தை சேர்த்தனர். காலை உணவாக இட்லி, தோசை, கிச்சடி மற்றும் தண்ணீர் பாட்டில், அடிக்கடி 'டீ' வழங்கப்பட்டது. மதிய உணவாக எலுமிச்சை சாதம், காய்கறிக் கலவை சாதம் வழங்கப்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
21-ஜன-202213:58:06 IST Report Abuse
Elango இந்தியாவில் எந்த ஒரு அரசும் சாமானியர்கள் வாழ வழி செய்ய வில்லை.. பணக்கார முதலைகள் வாழவே வழி செய்கிறது ..இப்படி நடந்து கொள்ளும் அரசும் ,பணக்கார முதலைகள் அனைவரும் அவர்கள் சேத்து வைத்த சொத்தை மருத்துவ செலவுக்காக செலவு செய்தே துன்ப பட்டு துன்ப பட்டு இறந்து போவார்கள். இது நிச்சயம் நடக்கும் வாழ்க சாமானியர்கள் ஓங்குக சாமானியர்கள் குரல்
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
21-ஜன-202213:57:46 IST Report Abuse
V. Manoharan என்னத்த சொல்ல.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
21-ஜன-202213:50:13 IST Report Abuse
Elango ஒரு மாஜி வீட்டில் நடக்கும் சோதனை மூலம் அனைத்து மாஜியும் ஊசாராகி இருப்பார்கள் இது தெரிந்தும் ஏன் ஒவ்வரு மாஜிக்கல் வீட்டிலும் காலம் கடந்து சோதனை...7 கிலோ தங்கத்தை அன்பழகன் அதிகாரிகள் பார்க்கும் படியா வைத்திருப்பார் யார் நாடகம் ஆடுகிறார்கள் அப்படி மக்களை ஏமாற்றி இரு கட்சிகளும் நாடகம் ஆடினால் காலம் பதில் சொல்லும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X