புதுடில்லி,:''சர்வதேச அளவில் இந்தியா பற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரத்தை முறியடித்து, நாட்டின் சிறப்பை தெரியப்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி, 'வீடீயோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று துவக்கி வைத்தார். 'பிரம்ம குமாரிகள்'இதில், 'பிரம்ம குமாரி கள்' அமைப்பின் சார்பில் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு முயற்சிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதில் 30 பிரசாரங்கள், 15 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றமும், நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்தது. அதனால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல அனைவரும் தங்கள் கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும்.
நம் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகிறோம். ஆனால் இப்போதும் நம் கடமையை சரியாக செய்யாமல் இருக்கிறோம். இந்த நோய் நம் நாட்டை, சமூகத்தை பாதித்துள்ளது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து உரிமைகளை பற்றியே பலரும் பேசி வருகின்றனர். அதற்காக போராட்டங்களும் நடத்துகின்றனர். சில சூழ்நிலைகளில் உரிமைகளை பற்றி பேசுவது சரியாக இருக்கலாம். ஆனால் உரிமைகளை மட்டுமே பேசி கடமையைச் செய்ய மறந்து விட்டோம். இதனால் நாடு பலவீனமாக உள்ளது. சிறப்பான வளர்ச்சிநாம் அனைவரும் நம் இதயத்தில் கடமை என்ற விளக்கை ஏற்றுவோம்.
நாம் இணைந்து பணியாற்றி கடமையை சரியாக செய்வோம். அதன்பின் சமூத்தில் நிலவும் கொடுமைகள் மறைந்துவிடும். நாடு சிறப்பான வளர்ச்சியை எட்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை சீரழிக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. இதை அரசியல் என கூறி நாம் அலட்சியப்படுத்த கூடாது. ஏனெனில் இது நம் நாட்டைப் பற்றியது.இதை முறியடித்து நாட்டின் சிறப்பை தெரிவிக்கும் உண்மையான முகத்தை சர்வதேச அளவில் வெளிப்படுத்த வேண்டியது நம் கடமை.
பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் சர்வதேச அளவில் இந்தியாவை பற்றி செய்யப்படும் பொய் பிரசாரங்களை முறியடித்து, இந்தியாவின் மதிப்பை தெரிவிக்கும் உண்மையான முகத்தை வெளிப்படுத்த வேண்டும்.சமத்துவம், சமூக நீதி ஆகிய துாண்களின் மீது சமூகம் வலுவாக நிற்க வேண்டும்.
பெண்களை உலகின் பல நாடுகள் ஒதுக்கி வைத்த போது, பெண்களை தெய்வமாக வழிபட்டது நம் நாடு. பெண்களை சக்தியாக, துர்க்கையாக, பாரத மாதாவாக வழிபடுவது நம் பண்பாடு. பெண்களின் மேம்பாட்டுக்கு கடந்த ஏழு ஆண்டு களில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு, பிரசவ கால விடுமுறை அதிகரிப்பு, மத்திய அமைச்சரவை யில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் 100வது சுதந்திர ஆண்டை 2047ல் கொண்டாட உள்ளோம். அதனால் அடுத்து வரும் 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. இந்த 25 ஆண்டுகளில் நாம் தியாகம், கடின உழைப்பு, எளிமை, தவம் ஆகியவற்றை கடைப்பிடித்து 100வது சுதந்திர ஆண்டில் உலகின் குருவாக இந்தியாவை திகழ வைக்க வேண்டும்.
அந்நியர்களிடம் அடிமையானதால் நம் நாடும், சமுகமும் இழந்த மதிப்பு, மரியாதை உள்ளிட்டவற்றை அடுத்த 25 ஆண்டு களில் மீண்டும் பெற வேண்டும்.நாட்டின் கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றை பாதுகாப்பதுடன் நவீன தொழில்நுட்பங்களையும் நாம் ஏற்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
மொரீஷியசில் திட்டங்கள்துவக்கி வைத்தார் பிரதமர்
இந்திய பெருங்கடலில்
அமைந்துள்ள தீவு நாடான மொரீஷியசில் இந்தியாவின் உதவியுடன் வீடுகள்
கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த்
குமார் ஜுக்நாத்தும் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வழியாக திறந்து வைத்தனர்.
மேலும், இந்தியாவின் உதவியுடன் மொரீஷியசில் அமைக்கப்பட உள்ள சிவில் சர்வீஸ்
கல்லுாரி, சூரிய மின்சக்தி பண்ணை திட்டங்களையும் இருவரும் துவக்கி
வைத்தனர். மொரீஷியசில் மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்தை துவக்குவது பற்றியும்
இரு தலைவர்களும் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE