சபரிமலை:மகரஜோதி சீசன் முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவாபரணங்கள் பந்தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
கேரள மாநிலம் சபரி மலை அய்யப்பன் கோவிலில் ஜன., 14ல் மகரஜோதி தரிசனத்துக்கு பின் சுவாமி பவனி, சரங்குத்திக்கு எழுந்தருளல், மாளிகைப்புறத்தில் குருதி பூஜை ஆகியவை நடந்தன.நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர்வர்மா சன்னதி முன் வந்தார். அவருக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பிரசாதம் வழங்கினார்.
பின் திருவாபரண பெட்டி களுடன் பக்தர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் அய்யப்பனை வணங்கி விட்டு பந்தளத்துக்கு புறப்பட்டனர். தொடர்ந்து மேல் சாந்தி நடை அடைத்து சாவியுடன் 18ம் படிக்கு கீழே வந்தார். அங்கு சங்கர் வர்மாவிடம் கோவில் சாவி மற்றும் பண முடிப்பை வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட அவர், மீண்டும் சாவி மற்றும் பணமுடிப்பை மேல்சாந்தியிடம் கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என கூறி விடை பெற்றார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்., 12ம் தேதி மாலை சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE