நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு எண்ணிக்கை குறித்த விபரங்கள், மாநில தேர்தல் கமிஷன் இணையதளத்தில் 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளன.தமிழகத்தில் 2016ல் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் இருந்தன. இவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்து 820 வார்டுகள் இருந்தன.
அதிகபட்சமாக, பேரூராட்சிகளில் 8,288 வார்டுகளும், நகராட்சிகளில் 3,486 வார்டுகளும், மாநகராட்சிகளில் 1,064 வார்டுகளும் இருந்தன. தற்போது, மாநகராட்சிகள் 21, நகராட்சிகள் 138 ஆகவும் அதிகரித்துள்ளன. பேரூராட்சிகள் எண்ணிக்கை 490 ஆக குறைந்துள்ளன.தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், tnsec.tn.nic.in என்ற தேர்தல் கமிஷன் இணையதளத்தை பலரும் பார்வையிட துவங்கியுள்ளனர்.
இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி விபரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எண்ணிக்கை, அவற்றில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள்
வெளியிடப்படவில்லை. கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட விபரங்கள் அப்படியே உள்ளன. இதனால், நகர்ப்புற தேர்தல் தொடர்பான தகவல்களை அறிய முடியாத நிலை உள்ளது.
இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதிலும் கிடைப்பதில்லை. மாநில தேர்தல் கமிஷன் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ளாதது, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE