பணஜி:கோவா சட்டசபை தேர்தலில், 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதில், முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பரீக்கரின் மகன் உத்பாலின் பெயர் இடம் பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் இம்முறை தீவிரமாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி, உத்பாலை தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கிறது. முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 14ல் நடக்கிறது.
மொத்தம் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு, 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்தது.முதல்வர் பிரமோத் சாவந்த் சான்குலிம் தொகுதியிலும், துணை முதல்வர் மனோகர் அஜ்கனோக்கர் மட்காவ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோவாவில் பா.ஜ., வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் 2019ல் காலமானார். இவர் பணஜி தொகுதி எம்.எல்,ஏ.,வாக 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தார்.இவரது மகன் உத்பால், பணஜி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உத்பால் பெயர் இடம் பெறவில்லை. பணஜி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ., அட்லான்சோ மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மனோகர் பரீக்கர் மீது கோவா மக்கள் இப்போதும் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அவரது மகனுக்கு பா.ஜ.,வில் சீட் வழங்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கெஜ்ரிவால் அழைப்பு
டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: தேவைக்கு பயன்படுத்தி விட்டு துாக்கி எறியும் பா.ஜ.,வின் கொள்கையைப் பார்த்து கோவா மக்கள் வருத்தமடைந்துள்ளனர். மனோகர் பரீக்கர் மீது எப்போதும் மதிப்பு வைத்துள்ளேன். ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உத்பாலுக்கு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வில் ஏற்பட்டு உள்ள இந்த சலசலப்பை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க ஆம் ஆத்மி முயற்சிக்கிறது; இதற்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.இது பற்றி கோவா மாநில பா.ஜ., பொறுப்பாளர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:உத்பால் பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்தவர். பணஜி தொகுதியில் போட்டியி வாய்ப்பு கேட்ட அவரிடம், வேறு நான்கு தொகுதிகளை பரிந்துரைத்தோம்; அவர் ஏற்கவில்லை. அவரிடம் பேசி வருகிறோம். பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
யோகியை எதிர்த்துஆசாத் போட்டி
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ல் துவங்கி, ஏழு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தலில் முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக, பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர ஆசாத் அறிவித்து உள்ளார்.
எம்.எல்.ஏ.,வை விரட்டிய மக்கள்
உத்தர பிரதேச மாநிலம் கதவுலி தொகுதி பா.ஜ. - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் விக்ரம் சிங் சைனி. சர்ச்சைக்குரிய வகையில் பேசி கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது இவரது வழக்கம்.இந்நிலையில் கதவுலி தொகுதியில் பிரசாரம் செய்ய சைனி காரில் வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை விட்டு இறங்க விடாமல் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால், அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் திரும்பிச் சென்றார்.
காங்., பிரமுகர்பா.ஜ.,வில் ஐக்கியம்
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா சார்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.மாநிலம் முழுதும், 'நான் சிறுமி; என்னாலும் போராட முடியும்' என்ற கோஷத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவரான டாக்டர் பிரியங்கா மவுரியா தீவிர பிரசாரம் செய்தார். தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து பா.ஜ.,வில் பிரியங்கா மவுரியா இணைந்தார்.
இதேபோல் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,வும், கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உறவினருமான பிரமோத் குப்தாவும் பா.ஜ.,வில் இணைந்தார்.
காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்?
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு மக்களிடம் கருத்து கேட்டு முதல்வர் வேட்பாளராக பகவந்த் சிங் மானை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய, ராகுலின் நெருங்கிய நண்பர் நிகில் ஆல்வா, மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதில் முதல்வர் வேட்பாளர்களாக சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, சுனில் சிங் ஜாக்கர் ஆகியோர் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE