கோல்கட்டா:ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றுவது தொடர்பாக சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பதவியான ஐ.ஏ.எஸ்.,மற்றும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகள், தாங்கள் தேர்ந்தெடுக்கப் படும் மாநிலங்களில் பணிபுரிகின்றனர். அயல்பணிமத்திய அரசு துறைகளுக்கு தேவையான அதிகாரிகள், மாநிலங்களில் இருந்து அயல்பணியாக அனுப்பப்படுவர். மத்திய அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனால் மாநிலங்கள் போதிய அளவில் அதிகாரிகளை அனுப்பி வைப்பதில்லை.
இதையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணிச் சட்டத்தில் புதிய திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. திறமை பாதிக்கும்இதன்படி மத்திய அரசு குறிப்பிடும் அதிகாரிகள், குறிப்பிட்ட தேதிகளில் மத்திய அரசு பணியில் சேர வேண்டும். இதற்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை.இந்த சட்டத் திருத்தத்துக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் இந்த புதிய சட்டத் திருத்தம் அதிகாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர்களது திறமை பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளது.இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE