சென்னை:தர்மபுரி மாவட்டத்தில், 56.20 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த 46 திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
மேலும், 35.42 கோடி ரூபாய் மதிப்பில், 591 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், 13 ஆயிரத்து 587 பயனாளிகளுக்கு, 157.41 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
*தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, மூன்று நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை, 4,600 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்படும்.
* சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனுாருக்கும் இடையே, புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.
* தர்மபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும்.
* புதிய 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* கலெக்டர் அலுவலக வளாகத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலக கட்டடம் அமைக்கப்படும்.தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஆறு மாதங்களில், 304 திட்டங்களுக்காக, 1.34 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ்மீனா கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE