தஞ்சாவூர்:குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, குடந்தையில் தயாராகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில், கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் 'ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பேர் பவுண்டேஷன்' சார்பில், 120 கிலோ எடையில், அவரது மார்பளவு ஐம்பொன் சிலையை, டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், நாகேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, களிமண்ணில் அவரது உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.அடுத்து, ஐம்பொன்னில் பிபின் ராவத் சிலைக்கு முழு உருவம் கொடுக்கும் பணி நடக்க உள்ளது.
இது குறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் பாபு மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவு பெறும். 7 லட்சம் ரூபாய் செலவில் சிலை தயாராகிறது. பின், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, எட்டு மாநிலங்கள்வழியாக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்றை உருவாக்கும் விதமாக, யாத்திரையாக சிலையை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, டில்லியில் உள்ள இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சிலையை சமர்ப்பிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE