உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
வி.பாஸ்கர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்லறையில் குழி தோண்டி புதைத்து, அதன் மீது சமாதியும் கட்டிய பின், அந்த பிணத்திற்கு உயிர் கொடுத்து எழுப்பி உட்கார வைக்க முடியுமா? முடியாதல்லாவா? ஆனால், அப்படி ஒரு உயிர் கொடுத்து எழுப்பி உட்கார வைக்கும் முயற்சியில் தான், தி.மு.க., அரசு ஈடுபட்டிருக்கிறது. தி.மு.க.,வின் உள் நோக்கம் புரியாத, தமிழகத்தில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், அந்த முயற்சிக்கு பின்பாட்டு பாடுகின்றன.
தமிழக அனைத்து கட்சி குழுவைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 12 நிமிடங்கள் பேசி இருக்கின்றனர். குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்வதற்கே, 10 நிமிடங்கள் ஆகி இருக்கும். அடுத்து பிஸ்கட் சாப்பிட்டு, தேநீர் பருக வேண்டும். மீதி எத்தனை நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இந்த டில்லி பயணம், தமிழக மக்களையும், மருத்துவம் பயில விரும்பும் தமிழக மாணவர்களையும் திசை திருப்புவதற்காக மட்டுமே பயன்படும்; ஒருபோதும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்கவேகிடைக்காது.
![]()
|
தாயத்து விற்கும் வியாபாரி, 'பாம்புக்கும், கீரிக்கும் சண்டை விடுவேன்' என்று சொல்லி சொல்லியே கூட்டத்தை கலைய விடாமல் நிறுத்தி வைத்திருந்து, காரியத்தில் கண்ணாக, தாயத்து விற்பனையில் ஈடுபடுவான். அதுபோல, தி.மு.க., அரசு இந்த, 'நீட் தேர்வு விலக்கு' என்ற வார்த்தையை வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. இவர்களது மாய்மால பசப்பு வார்த்தைகளை நம்பி கொண்டிராமல், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுதோறும் தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு கூட, மூன்று லட்சம் தமிழக மாணவர்கள் அந்த நீட் தேர்வை எழுதி இருப்பதாக தெரிகிறது.
தி.மு.க., அரசு, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மான நகலை, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியிடம் கொடுத்து, விளக்கம் கேட்டிருக்கலாம். அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பதை விபரமாக, தெளிவாக, பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூறி இருப்பார். தேவையில்லாமல், ஏன் டில்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்? அதாவது, 'டில்லியில் கோரிக்கை மனு கொடுத்தோம்' என்று சொல்லியே, அடுத்த ஒரு ஆண்டை ஒப்பேற்றி விடலாம் என்பது தான், தி.மு.க.,வின் தந்திரம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE