இந்திய நிகழ்வுகள்:
தீ வைத்தவருக்கு 5 ஆண்டு சிறை
புதுடில்லி: டில்லியில் 2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின. அதில், 53 பேர் உயிரிழந்தனர்; 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது 73 வயதான மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு தினேஷ் யாதவ் என்பவர் தீ வைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் தினேஷ் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காளிசரண் மஹராஜ் மீண்டும் கைது
தானே: மஹாத்மா காந்தி குறித்து அவதுாறாக பேசியதாக கூறி, ஹிந்து அமைப்பின் தலைவரான காளிசரண் மஹராஜ் சமீபத்தில் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். இந்நிலையில் மஹாராஷ்டிராவின் தானேவில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், காளிசரண் மஹராஜ் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
3 கண் கன்றுக்குட்டி உயிரிழப்பு
ராஜ்நந்த்காவன்: சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவன் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசு, கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி மூன்று கண்களுடன் பிறந்தது. இரண்டு கண்களுக்கு நடுவே நெற்றியில் மூன்றாவது கண் இருந்தது. மேலும் நான்கு நாசி துவாரங்களும் இருந்தன. கடவுளின் அம்சமாக கருதி அப்பகுதி மக்கள், அதை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த கன்றுக்குட்டி காலை உயிரிழந்தது.
'புல்லி பாய்' செயலி: இளைஞர் கைது
மும்பை: முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில் 'புல்லி பாய்' என்ற செயலி வாயிலாக அவர்களை ஏலம் விட்டது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து அந்த செயலியை மத்திய அரசு முடக்கியது. அதை பயன்படுத்தி முறைகேடு களில் ஈடுபட்டதாக ஏற்கனவே உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் ஒடிசாவில் எம்.பி.ஏ., பட்டதாரியான நீரஜ் சிங் என்ற இளைஞர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தொழிற்சாலையில் தீ: மூவர் பலி
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பர்டோலி அருகே, பலசேனா என்ற இடத்தில் தனியார் சாயத் தொழிற்சாலை உள்ளது. சில நாட்களாக ஆலை வளாகத்தில் தச்சு வேலை நடந்து வந்தது. இங்கு நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மரச்சாமான்களில் பற்றிய தீ வேகமாக பரவியது. இதில் மூன்று தச்சர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லையில் மாயமான சிறுவன்
புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் எல்லை பகுதியில் காணாமல் போன மிரம் தரோன், 17, என்ற சிறுவனை கண்டுபிடித்து ஒப்படைக்க, சீன ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக நம் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன், சமீபத்தில் இந்திய - சீன எல்லையில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணி அதிகாரியை தாக்கிய தம்பதி கைது
புனே:மஹாராஷ்டிராவில் கர்ப்பிணியான வனத்துறை அதிகாரியை கடுமையாக தாக்கிய தம்பதி கைது செய்யப்பட்டனர். இங்கு சதாரா மாவட்டத்தில் உள்ள பல்சவாடே கிராமத்தில் முன்னாள் கிராம தலைவரான ஒருவர், உள்ளூர் வன மேலாண்மை குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இங்குள்ள வனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், அந்த கிராமத்தில் இருந்து ஒப்பந்த வன தொழிலாளர்களை அவ்வப்போது அழைத்துச் சென்று வந்துள்ளார். தன்னிடம் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை அழைத்துச் சென்றதால், அந்த பெண் அதிகாரி மீது முன்னாள் கிராம தலைவர் கோபத்தில் இருந்தார்.
கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, தன் மனைவியுடன் சேர்ந்து சென்று, கர்ப்பிணியாக உள்ள அதிகாரியை சரமாரியாக தாக்கி உள்ளார். அந்த அதிகாரியின் கணவரையும் அவர்கள் தாக்கி உள்ளனர். கர்ப்பிணி அதிகாரியை அவர்கள் தாக்கும் காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைஅடுத்து, தாக்குதல் நடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கணவன் தலையை துண்டித்த மனைவி
ரேனிகுண்டா: ஆந்திராவில், தலையை வெட்டி கணவனை கொன்றுவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் மனைவி சரணடைந்தார்.
ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தின் ரேனிகுண்டா பகுதியில் ரவிசந்திரன், 53, மற்றும் வசுந்தரா, 50, என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது மகன் உள்ளார். இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பில் முடியவே, ஆத்திரமடைந்த வசுந்தரா, தன் கணவனை கத்தியால் குத்தினார். இதில், ரவிசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், ரவிசந்திரனின் தலையை அறுத்து அதை துண்டாக வெட்டி உள்ளார். பின், அந்த தலையை துணிப் பையில் வைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற வசுந்தரா, சரணடைந்தார்.அவரை கைது செய்த போலீசார், விசாரணையை துவக்கி உள்ளனர்.
குளிருக்கு அடுப்பை பற்றவைத்து துாங்கிய 4 குழந்தைகள், தாய் மூச்சுத் திணறி பலி
புதுடில்லி:டில்லியில் குளிருக்காக வீட்டுக்குள் அடுப்பை பற்றவைத்து துாங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
டில்லி சக்தாரா சீமபுரி என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் ராதா என்ற பெண், தன் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.நேற்று காலையில் அவர்களது வீட்டில் இருந்து நீண்ட நேரம் யாரும் வெளியே வரவில்லை. வழக்கத்துக்கு மாறாக வீட்டுக் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
போலீசார் வந்து வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது ராதாவும், அவரது நான்கு குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சோதித்து பார்த்ததில் ராதா உட்பட நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். கடைசி குழந்தை மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. உடனே மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் அந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது. அவர்களது வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது; வீடு முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
டில்லியில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் இரவில் குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னல் உட்பட அனைத்தையும் முழுமையாக அடைத்துவிட்டு அடுப்பை பற்ற வைத்து ஐந்து பேரும் உறங்கி உள்ளனர். 'ஸ்டவ்' நீண்ட நேரம் எரிந்ததால் அதில் இருந்து வெளியான நச்சுப் புகை வெளியேற வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே சுற்றி உள்ளது. இதனால் ராதா மற்றும் நான்கு குழந்தைகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துாக்கத்திலேயே இறந்தது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
தமிழக நிகழ்வுகள்:
சிறுத்தையிடம் இருந்து உயிர்தப்பிய சிறுவன்
வால்பாறை: வால்பாறை அருகே, சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்தார்.
வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில், தொழிலாளியாக பணியாற்றுபவர் பிராஜ்நகசிமா. இவரது மகன் திலீப், 11. நேற்று மாலை, 4:30 மணிக்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தீலிப்பை, புதரில் இருந்து வந்த சிறுத்தை தாக்கியது. இதை கண்ட மக்கள் கூச்சலிட்டதும், சிறுவனை விட்டுவிட்டு, புதரில் சிறுத்தை மறைந்தது. சிறுத்தை தாக்கியதில், கை, முதுகு பகுதிகளில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுவனை, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். பகல் நேரத்தில், சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம், நல்லகாத்து எஸ்டேட் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி நாடார் சிறையில் அடைப்பு
சென்னை:ஹரி நாடாரை, பிப்.,2 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார், 48; பண மோசடி வழக்கில் கைதாகி, கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டார். நடிகை விஜயலட்சுமி, 42, ஹரி நாடார் தன்னை தற்கொலைக்குத் துாண்டியதாக, 2020ல் வழக்கு போட்டார். இந்த வழக்கில், திருவான்மியூர் போலீசார்,ஹரி நாடாரை நேற்று முன் தினம் கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின் இவரை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஹரி நாடாரை, பிப்.,2 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைஅடுத்து அவர், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கூலித்தொழிலாளி எரித்துக்கொலை
பெரியகுளம் : பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தில் கூலித்தொழிலாளி செந்தில் 50, எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எ.காமாட்சிபுரம் குப்பை தொட்டியில் நேற்று பாதி எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் செந்தில் 50, என்பதும், இவரது தந்தை சிங்காரவேலுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ராஜம்மாளின் மகன் செந்தில் என்பதும் தெரியவந்தது. சொத்து தகராறில் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
![]()
|
மனைவி கொலை: கணவன் கைது
திருப்பூர்: திருப்பூரில் மனைவியை வெட்டி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், காசிதர்மம் பகுதி யைச் சேர்ந்தவர் குமார், 32; டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி, 25; இரு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமி பிரிந்து சென்றார். திருப்பூர், ரங்கநாதபுரம் ஜெ.ஜெ.நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் தனலட்சுமி பணிபுரிந்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், திருப்பூர் வந்த குமார், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். நேற்று அதிகாலை, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் தனலட்சுமியை தலை, கழுத்து என பல இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின், அரிவாளுடன் வேலம்பாளையம் கிராமநிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். வேலம்பாளையம் போலீசார், குமாரை கைது செய்தனர்.
சிறுமிக்கு தொல்லை: மத போதகர் கைது
ஊட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரயிலில் தவறி விழுந்த தாய் குழந்தை மீட்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தவறி விழுந்த குழந்தையையும் தாயையும் காப்பாற்றிய ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலம்.65. இவர் நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்றார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி.32, கவிதா.30. ஆகியோர் வந்திருந்தனர்.
மங்கலத்தை ரயிலில் ஏறி அமர வைத்து விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில் புறப்பட்டு உள்ளது. அதனை அறிந்த சகோதரிகள் இருவரும் அவசரமாக ரயிலை விட்டு இறங்கி உள்ளனர்.முதலில் தையல்நாயகி ரயிலில் இருந்து இறங்கி உள்ளார். அவரை தொடர்ந்து கவிதா தன் குழந்தையுடன் இறங்கிய போது தடுமாறி விழுந்துள்ளார்.
இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று தனது கால்களால் தாங்கிப்பிடித்து இருவரையும் எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார்.இன்ஸ்பெக்டர் சுதீர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர். பி. எப் இன்ஸ்பெக்டர் சுதீர் குமார் மற்றும் வீரர்கள் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தன் உயிரை பணயம் வைத்து தாய், குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதீர்குமாரின் வீரச் செயலுக்கு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தி.மு.க., பெண் சேர்மன் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை: கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா, அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை தின்று, கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த மாலா, 48. இவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து உள்ளது. மேலும், தி.மு.க., நிர்வாகிகளும் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை .இதனால், கறம்பக்குடி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்சித் தலைமைக்கும் மாலா புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை, ஒன்றிய தலைவர் மாலா, கலெக்டர் கவிதா ராமுவை சந்திப்பதற்காக, அவரது அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக மாடிப்படிகளில் ஏறியபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை மீட்டு விசாரித்த போது, அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை தின்று, கையில் துாக்க மாத்திரைகளை கொண்டு வந்திருந்ததும் தெரிந்தது.அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணன் சாவு; தம்பி பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன், 64. மனைவி, மகன், மகள் உள்ளனர். நாராயணனின் தம்பி வெங்கடேசன், 58; திருமணமாகவில்லை. அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். நாராயணன் கடந்த 18ம் தேதி, உடல்நலக் குறைவால் இறந்தார். துக்கம் தாங்காமல் தம்பி வெங்கடேசன் அழுது கொண்டே இருந்தார். 19ம் தேதி மாலை 6:00 மணியளவில், நாராயணன் உடலுக்கு மயானத்தில் இறுதி சடங்குகள் செய்தபோது, வெங்கடேசன் மயங்கி விழுந்து இறந்தார். அண்ணன் உடல் அருகே அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனையில் 'மட்டையான' மருத்துவர்
நாமக்கல்: நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், போதை தலைக்கேறிய டாக்டர் மயங்கி விழுந்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் டாக்டராக பணியாற்றுபவர் சிவானந்தம், 45. இவர் நேற்று மதியம் அளவுக்கதிகமாக மது குடித்து போதை தலைக்கேறி மயங்கினார். அவரை ஊழியர்கள் சிலர் துாக்கி வந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள, மக்கள் சேவை மையம் அறையில் படுக்க வைத்து சென்றனர். நீண்ட நேரம் போதை மயக்கத்தில் இருந்த அவர், மாலையில் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது.
'டீன்' சாந்தா அருள்மொழி கூறுகையில், ''டாக்டர் சிவானந்தம், பணி நேரத்தில் போதையில் இருந்தது குறித்து, மருத்துவத் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.
வாயில் 'பிளாஸ்டர்' ஒட்டி வாலிபரிடம் டூவீலர் பறிப்பு
திருப்பூர்: ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அரவிந்த், 18. திருப்பூர், சாமளாபுரத்தில் தங்கி, பல்லடம் செம்மிபாளையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பெத்தாபூச்சிபாளையம், அய்யன் நகர் அருகில் சென்ற போது, திடீரென, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த கட்டையால் அரவிந்தை தாக்கினர்.அவரை காட்டுப்பகுதிக்கு துாக்கி சென்று, கையை கட்டி, வாயில் 'பிளாஸ்டர்' ஒட்டி, பணம் கேட்டு மிரட்டினர். அரவிந்திடம் இருந்த மொபைல் போன் மற்றும் டூவீலரை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அங்கிருந்து தப்பிய அவர் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உலக நிகழ்வுகள்:
பாக்.,கில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானில் இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்படும் அனார்கலி மார்கெட்டில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் பலியாகினர்; 20 பேர் காயம் அடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 'இரு சக்கர வாகனத்தில் 'டைம் பாம்' பொருத்தப்பட்டு வெடிக்க செய்யபட்டு இருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மத அவதுாறு செய்த பெண்ணுக்கு மரண தண்டனை
இஸ்லாமாபாத்: முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக நண்பருக்கு 'வாட்ஸ் ஆப்' தகவல் அனுப்பிய அனிகா அட்டீக் என்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE