கோவை:உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நேரத்தில், கோவையில், 'சூயஸ்' குடிநீர் திட்ட பிரச்னையை, மா.கம்யூ., கிளப்பியிருப்பதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளையும் இழந்ததால், கோவை மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்கிற நோக்கத்தில், தி.மு.க.,வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மாநகராட்சி பகுதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, 'சூயஸ்' நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, மா.கம்யூ., நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஆட்சிக்கு வந்ததும், சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்ததை, மா.கம்யூ., - எம்.பி., நடராஜன் தற்போது நினைவுபடுத்தியிருக்கிறார். இது, தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, உள்ளாட்சி தேர்தலுக்கான 'சீட்' பங்கீடு பேச்சுக்கு முன், மா.கம்யூ., நெருக்கடி கொடுக்கிறதோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் பத்மனாபன் கூறுகையில், ''உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், மாநகரம் முழுவதும் இதைப்பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே, இப்பிரச்னையை சுட்டிக்காட்டுகிறோம்,'' என்றார்.