புதுடில்லி: நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 3.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக 3.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், கடல் பொருட்கள் மற்றும் தோட்டப் பொருட்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் ஏற்றுமதி 23.21 சதவீதம் அதிகரித்து, 2.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அமைச்சகம் ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்கள் ஆகியவற்றுக்கான காலக்கெடு முடிவடைந்தாலும், அதற்கப்பாலும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக வழங்குதல் என, பல நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் வாயிலாக, உலக தேவைகளை இந்தியாவால் எதிர்கொள்ள முடியும். கடல் பொருட்கள் ஏற்றுமதியும் இதுவரை இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில், முதன் முறையாக 59 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE