பண்ருட்டி: திருமண விழாவில் நடனமாடிய மணமகளை மணமகன் அடித்ததால், திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வேறு வாலிபருடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 29. பி.இ., படித்து, சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசந்தியா, 23; எம்.எஸ்.சி., பட்டதாரி. இரு வீட்டார் ஏற்பாட்டில், காடாம்புலியூரில் உள்ள ஏ.வி., மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு, விருந்து, பாட்டு கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில் மணப்பெண் ஜெயசந்தியா, மணமகன் ஸ்ரீதர் ஆகியோர் பாட்டுக்கு நடனமாடினர். அப்போது, மணமகளின் சகோதரர் முறையில் உள்ள உறவினர் ஒருவரும் சேர்ந்து நடனமாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர், ஜெயசந்தியாவை திடீரென கன்னத்தில் அறைந்தார்.
ஆத்திரமடைந்த ஜெயசந்தியா, ஸ்ரீதரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறிஅழுதார். பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தினர். சீர்வரிசை பொருட்களோடு மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இரவோடு இரவாக உறவினர்கள் கூடிப் பேசி, நேற்று காலை பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஜெயசந்தியாவிற்கும், திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான செஞ்சியைச் சேர்ந்த கோபிநாத், 26 என்பவருக்கும் திருமணம் நடத்தினர். இவர், செஞ்சி பகுதியில் தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE