சென்னை : 'கட்டாய மத மாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
அரியலுார் மாவட்டம், வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயியின் மகள் லாவண்யா. இவர் அம்மாவட்டத்தை சேர்ந்த துாய இருதய மேல்நிலை பள்ளியில், ௮ம் வகுப்பு முதல் மாணவியர் விடுதியில் தங்கி படித்துள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவி தற்போது, பிளஸ் 2 படிக்கிறார். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சிஸ்டர் சகாயமேரி, இவரை மதம் மாறச் சொல்லி, தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார்.
மாணவியின் பெற்றோரையும் சந்தித்து, அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி, மதம் மாற கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும், பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மாணவியை படிக்க விடாது, விடுதி கணக்கு வழக்குகளையும், இதர வேலைகளையும் செய்யுமாறு மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளார்.மன அழுத்தத்தால் மனம் உடைந்த மாணவி லாவண்யா, தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத்தன்மை உள்ள திரவத்தை அருந்தியுள்ளார்.
உடல்நலக்கேடு ஏற்பட்டதால், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல், மாணவி நேற்று மாலை மரணம் அடைந்து உள்ளார். மாணவி மரணத்திற்கு முன் பேசிய, வீடியோ பதிவு மனதை பதற வைக்கும். போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மாணவி பேசிய வீடியோ பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.
![]()
|
மரணத்திற்கு முன் மாணவி கொடுத்த வீடியோ பதிவு மிக தெளிவாக சிஸ்டர் சகாயமேரியும், பள்ளி நிர்வாகத்தினரும் மத மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதை உறுதி செய்கிறது. அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுக்கு பா.ஜ., நன்றி
அண்ணாமலை அறிக்கை: பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்று, காவல் ஆணையம் அமைத்ததற்கு நன்றி. பல்வேறு சமயங்களில் காவல் ஆணையத்தின் முக்கியத்துவத்தை, பா.ஜ., வலியுறுத்தியபடி இருந்தது. ஆணையத்தை அமைத்ததோடு, அரசின் கடமை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.
காவல் ஆணையம் என்பது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும்.காவலர்களுக்கு தேவையான நலத் திட்டங்கள், ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்கி, முறையாக செயல்படுத்தினால், காவல் துறை மக்களுக்காக மேலும் ஊக்கத்தோடு பணியாற்ற உந்துகோலாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE